வாணிஅருள்வாய்! ராகம்: மலஹரி
வெள்ளைக் கலையுடுத்தி வேதப் பொருள் விளங்க
வீணை யிசைத்து வரும் வாணியே
தெள்ளுத மிழில்மன மள்ளும்வ கையிலொரு
பாட்டி லுனை வாழ்த்த அருளுவாய் !
அஞ்சு மன மதனின் அலையும் நிலைய கற்றி
அமைதி யெனைய டைய அருளுவாய்
கெஞ்சும் எனைப் பார்த்து கொஞ்சும்ரா கங்கள்
கோடி உளம் சேர அருளு வாய்!
சொல்லும் பொருளுமெனச் செல்லு மிணைசேர்த்து
இசையை யுடன்சேர்த்து வாழ்த்துவேன்!
வெல்லும் வழிகாட்டி வேட்கை தனையோட்டி
வேண்டும் கல்விதந்து தேற்றுவாய்!
காலம் முழுமைக்கும் கண்கள் தனைமூடிக்
கருணை யுனைப் பாட வேண்டுவேன்!
கற்ற கல்வி என்றும் உற்றதுணையென்று
உதவி எனைக்காக்கச் செய்குவாய்!