Face Book LIKE

Sunday, October 14, 2018

காமாக்ஷி கருணா ஸாகரீ

காமாக்ஷி கருணா ஸாகரீ

 ராகம் : கமலமனோஹரி/பாகேஸ்ரீகாமாக்ஷி கருணா சாகரீ
கமலா மனோஹரி
    கடைக்கண் திறந்தெமை
                          கடாக்ஷிப்பாயே.                 (காமாக்ஷி)

    கரும்பு வில்லதனைத்  தொடுத்து
                       புஷ்ப பாணங்க ளெய்து              (காமாக்ஷி)

     கரும்பு வில்லதனைத்  தொடுத்து
     புஷ்ப பாணங்களை எய்து         
     காமக்ரோத மதமாச்சர்யங்களை
                               அழித்தே எமக்கருள் புரிவாயே.      (காமாக்ஷி) 

கலியுகம் தன்னில்
கடுகி வந்தருள் புரி
காஞ்சியில் அமர்ந்த
கற்பகத் தருவே
கணம் கணந்தோறுமுன்
பக்தியில் திளைத்திட
கருணை புரிந்திடும்
                                           கண் கண்ட தெய்வமே.            (காமாக்ஷி)


 -கி.பாலாஜி
 11.10.2018
 காலை 10.45
(PC : Anand and Team)

Friday, August 17, 2018

இயற்கையின் சீற்றம் இயல்பே !

இயற்கையின் சீற்றம் இயல்பே !
------------------------------------------------------------


கணக்கிலடங்காக் குற்றம் புரிந்தோம்
காலத்தினையே சினம் கொளச் செய்தோம்
காட்டினை அழித்து நாட்டினைப் புரிந்தோம் 
கட்டிடங்களைக் காடாய் வளர்த்தோம் 

சூழ்வெளி கெடுத்துப்  பாழ்வெளி படைத்தோம்   
சுந்தரக் காற்றின் சுதந்திரம் கெடுத்தோம் 
ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் துளைத்தோம் 
அருமை கிராமச் சூழலை அழித்தோம் 

செயற்கை உரத்தைச் சேர்த்துத் தெளித்தோம் 
இயற்கை வித்தின் வீரம் அழித்தோம் 
இயற்கை உரங்களை இலையெனச் செய்தோம்
இன்னரு ளமுதின் தரத்தைக் குறைத்தோம் 

தொழில்வள மதனைக் கூட்டிட நினைத்து 
எழில்வள மனைத்தும் இழந்தே நின்றோம் 
தொன்மைக ளெல்லாம் தோற்றுத் தொலைத்தோம் 
தொல்பொருள் பலவும் போயின களைந்தோம்

இத்தனை செய்தும் இன்னல்கள்  புரிந்தும் 
இயற்கை அன்னை பொறுமை காத்தாள்
எல்லை மீறிட அன்னை சினந்தாள்
இருக்கும் அழகை அழித்திட முனைந்தாள்

கண்கெட் டழிந்தோம் கதிரவ னொளியைக்
கண்டிட விழைந்தோம் காலம் கடந்தோம் 
எத்தனை பிழைகள் யாம் புரிந்தாலும்
இத்தனை சீற்றம் தகுமோ தாயே !

அத்தனை பேரும் உன்மக வன்றோ 
அத்தனை அழகும் உன்னழ கன்றோ
எத்தனை வளங்கள் அழிந்து போயின 
எத்தனை உயிர்கள் மடிந்து போயின !

இதுபோல் தவறுகள் இனி நாம்புரியோம் 
இன்னல்க ளிழைத்தோம் இக்கணம் அறிந்தோம் 
எம்மை ஒறுத்தது போதும் நிறுத்தாய் !
எம தன்பேநீ என்றும் எம் தாய் ! 

அன்னை சினத்தால் அழித்தவை யனைத்தும் 
அவளே தருவாள் தவறுகள் மறப்பாள் 
அவள் இனிநினைத்தால் அனைத்தும் மாறும் 
அவள்கண் திறந்தால் பொழுதுகள் புலரும் 

காலை மலரும் கதிரவ னொளிரும் 
பூவைப் போலப் பொன்னொளி படரும் 
பொருந்திய வளங்கள் போற்றிக் காத்திடப்
போயிடும் துயரம் புல்நுனிப் பனியென !

--கி.பாலாஜி
ஆகஸ்ட் 17  2018 
(Written during  #KeralaFloods )

Friday, July 20, 2018

வாராது வந்த மாமணியைத் தோற்றோமோ !

'வாராது வந்த மாமணியைத் தோற்றோமோ' காணாமல் தவிக்கின்றோம் 
அந்தக் கண்ணின் மணியதனை,
கேளாமல் தெய்வமீந்த 
வரத்தின் பேரொளியை !

பொழுது விடிந்தால் 
புலனத்தில் அவன்பதிவு
காணாமல் நாமென்றும் 
கடந்து சென்றதில்லை!
பாரதியைக் கொண்டாடிப் 
பாரெங்கும் பவனிவரும் 
பதிவுகள் பலதந்து 
போற்றிப் பரவிடுவான்!

தேசத்தின் நலமொன்றே 
தெய்வமெனப் போற்றிடுவான்
தீய வேடங்கள் 
அனைத்தையுமே தன்னெழுத்தால்
கீறிக் களைந்திடுவான்!
கிழித்தே எறிந்திடுவான்!

பத்திரிகை தருமத்தைப் 
பாலித்தவன் இவனே!
பகட்டற்ற கருணையெனும் 
சொல்லுக்குப் பொருளதனைக் 
காரியத்தால் காண்பித்துக் 
கண்களை நிறைத்திட்டான்!

மறைந்துவிட்டான் எனச்
சொல்வதெல்லாம் பொய்!
மனதில்
நிறைந்துவிட்டான் என்ற 
நினைவொன்றே மெய் !

மந்திரச் சொற்களால் எத்தனை
மனங்களுக்கு பலம் தந்தான்!
மனதார உடனிருந்து
மனங்களின் வலிதீர 
மருந்திட்டு மாயம் 
பலபுரிந்தான்!

மற்றுள்ளோர் அவன்செய்த 
நற்செயல் தனைப்புகழ்ந்து
சொல்கையிலே அல்லவோ 
அறிகின்றோம் நாமும் 
அது குறித்து,
அந்த
அன்பான மனம் குறித்து !

வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல்
எத்தனை செய்துள்ளான்
என்பதனை நாமும்
இன்றன்றோ அறிகின்றோம்!
இதயம் நலிகின்றோம்!

இதனைப் புரிந்துகொள்ள
இப்படிப் பட்டதோர்
இழப்போ தேவையென 
நெஞ்சம் கனலாகி 
நெருப்பினிலே வேகின்றோம் !

வெந்து தணியுமோ 
இந்த வேதனைக்காடு !
வெந்துயர் சாக்காட்டின் 
மனமென்னும் வீடு !!

--கி.பாலாஜி 
05.07.2018

மவுனங்களின் இசை !

மவுனங்களின்  இசை !
---------------------------------------
வெந்தழலும் வெள்ளமும்
தண்மனதின்  வெண்சிறகை
விரித்துச் சிரித்திடவே
சிரித்து மகிழ்ந்திடவே,
சீரியதோர்  செந்தமிழில்
வரியெழுதும் கவியங்கே
வந்து பிறக்கின்றான் !
வான் தொடவே தான் முழங்கி
வண்ணமுற  இசைக்கின்றான் !

எங்கெங்கும் வண்ணமயம்
எண்ணங்கள் அன்புமயம்
ஏந்தி வரும் சொற்களெல்லாம்
இசை கொண்ட நாத லயம் !
பண்ணும் பதமும் தன்
பாதையிலே ஜதிபோடப்
பேச்சற்ற மௌனங்கள்
பாடுகின்ற ராகலயம் !

  பேச்சற்ற மௌனங்கள்
  பாடுகின்ற ராகலயம் !
  பிரபஞ்சமே இமைமூடி
  ரசிக்கின்ற இன்ப வரம் !


--கி.பாலாஜி
  ஜூன் 2018Monday, May 28, 2018

அன்பின் உருவம் அம்மா !
அன்பின் உருவம் அம்மா !
 அம்மா என்று சொல்லும்போது
அன்பைக் காண்கின்றேன்
அன்பின் உருவும் அவளின் உருவும்
ஒன்றென அறிகின்றேன்

அம்மா காட்டும் அன்புக் கென்றும்
காரணம் கிடையாது
அம்மா காட்டும் பரிவுக்கென்றும்
விலையே கிடையாது

அம்மா என்றொரு சொல்லின் சுகமோ
சொல்லில் அடங்காது
அம்மா என்பது ஆரம்பம் அது
என்றும் முடியாது

அன்னையின் கடனைத் தீர்க்க நினைப்பது
ஆபத்தே யாகும்
அன்னையின் நினைவு என்னும் நிழலில்
வாழ்வது வரமாகும்  --கி.பாலாஜி
13.05.2018

This has been composed and beautifully rendered by my wife LAKSHMI BALAJI, which you can hear by clicking this link
https://soundcloud.com/saransang/lb-anbin-uruvam-amma-online-audio-convertercom

Tuesday, June 6, 2017

உலகின் மூத்தகுடி உழவன்

(Photo Credit : Times of India)

உணவும் உடுக்கையும் 
இழந்த உழவனின் 
இடுக்கண் களைவ தாரிங்கே ? 

உண்பதோர் நாழி 

அளப்பதற் காளில்லை

உடுக்கும் நாலுமுழம் 

கிடைக்க வழியில்லை

மயிர்போயின் வாழாக் 

கவரிமான் போலிங்கு 
வாழ்ந்தும் ஆயிற்று ! 

சுவாசிக்கும் காற்றுக்கும் 

விலை கேட்கும் காலம்வரும் ! 
வீதியில் விழுந்து 
புரண்டலையும் நேரம் வரும்!

பிச்சையோ நாம் கேட்கின்றோம்?  

பிழைக்க வழி யாமறிவோம் ! 
பிழைத்தும்மைப் பேணவும் 
யாமறிவோம்!   

வீழ்ந்துலகைக் காக்கின்ற 
மழைத்துளியை 
வீணாக்கி விடவேண்டாம் ! 
விவசாயம் செய்வதற்கு 
வகை செய்தால்

அதுபோதும்! 

வீதிவரை வரும் தென்றல் 

வீட்டினுள்ளும்  நுழைந்தெம்மை  
நலன் விசாரிக்கும் 
நாள்தோறும்! 

விவசாயம் செய்திடவே 
வகை செய்து தாரும் !

விவேகம்  அதுவே !  

விளக்கமும் அதுவேதான் !  

சுழன்றும்  ஏர்ப் பின்னதே 
உலகென்பார்!  
சுழன்று   கொண்டேதான் 
இருக்கின்றான் உழவன்  !
துன்பத்தில்   
உழன்று  கொண்டும்தான் !


உணவின்றி நாட்டின் 

உழவன் மரிப்பதுவோ ?
உணவை அளிக்கின்ற அவனன்றோ 
உலகின் மூத்தகுடி ! 
உணர்வீர்  அவன் பெருமை! 
உணவின்றி அவன்மரித்தால் 
உலகே மரிப்பதுபோல் ! 
அன்னை மனம் நொந்தால் 
அவர்மக்கள் வாழ்வாரோ 
வளம்பெற்று ?


--கி.பாலாஜி

10.04.2017

மாலை 4.15

Saturday, March 11, 2017

போதி மரம் !பால்வெள்ளி நிலா வீசும்
பகட்டுத்தா ரகைகள் மின்னும்  
பலவண்ண நிறங்கள் காட்டும்
வான மேயென் கல்விச் சாலை !
    வான மேயென் கல்விச் சாலை !
    வாழ்வினைப் பயக்கும் சோலை !

நேற்றைக்கு அழுமாற் போலே 
அமுதத்தைப் பொழிந்த வானம்
இன்றைக்குத் தெளிவாய் நின்று 
சிரிக்கின்ற தென்னே யென்றேன்!

எல்லையற்ற தன்மை கண்டென் 
எண்ணமும் விரியக் கண்டேன் 
சிந்தனை, வானம் போலே 
விரிந்தாலே விடியும் என்றேன் !

எழிலார்ந்த காவும் கண்டேன்
எத்தனையோ மலர்கள் கண்டேன் 
முன்னின்ற மலரின் செடியில்
முள்ளொன்றும்  இருக்கக் கண்டேன் 

இன்பங்கள் என்றும் உண்டு
இடையிடையே துன்பம் உண்டு
என்பதை உணர்த்தும் பாங்கில் 
முள்ளதுவும் சிரிக்கக் கண்டேன்

வண்ணத்துப் பூச்சி பூவைச் 
சுற்றிவந்தமரக்   கண்டேன் 
சுவையான தேனை யதுவும்
சுவைத்துண்ணும் பாங்கு கண்டேன் 

புவிவாழ்வு சிறிதென் றாலும் 
பூவினில் தேனைப் போலே 
நிறைந்திடும் இனிமை உண்டு
நீயதை உணரல் வேண்டும் 

என்றெனக் குணர்த்தும் வண்டு
எண்ணத்தில் அமர்ந்து கொண்டு 
ஏழிசை கீதம் ஒன்று 
தன்னுள்ளே பாடிக் கொண்டு !

இதுநாளும் தேடித் திரிந்த 
குருவைநான் கண்டுகொண் டேன் 
காண்கின்ற பொருள்க ளெல்லாம் 
குருவேயென் றுணர்ந்து கொண்டேன் 

'எப்பொருள் யார்யார் வாய்க் 
கேட்பினும் அப்பொருள் தன்னில்'
உறைகின்ற உண்மை தன்னை
உணர்த்துமோர் குருவைக் கண்டேன் !

--கி.பாலாஜி
05.08.2016

Wednesday, March 8, 2017

மகளிர் தினம்தினம்

மகளிர் தினம் தினம்
_____________________
மாலையாய் வாழ்வில் நுழைந்து
மதலையால்
இல்லம் நிறைத்து,
மனமாளும்,
மனையாளும்
மனைவியாய்
இல்லுள்ளோர்
இதயம் நிறைத்து,
என்றென்றும்
எல்லோர் வாழ்வும் மலர்மணம்
பரவச் செய்யும்
மகளிருக் கொவ்வொரு நாளும் மங்கலப் பெருநா ளென்போம்
நாம்
மாதவம் செய்தோ ரென்போம் !
--மகளிர் தின வாழ்த்துக்கள் !
----கி.பாலாஜி
08.03.2017
பகல் 12 மணி