Face Book LIKE

Sunday, July 5, 2020

கனவில் மலர்ந்த கார்த்திகை நிலவு



பூவின் மணமும் தேனின் சுவையும்
புலரிக் கதிரில் ஒளிரும் ஒளியும்
பனியின் மென்மைத்தன்மை அதுவும்
பாலின் வெண்மை வெகுளிக் குணமும் 
ஆனைப் பிடியின் நடையின் அழகும்
மானின் கண்ணாய் மருளும் விழியும் 
பொன்னின் நிறமும் புவியின் திறமும்
போதவிழ் மலரின் பொன்றா அழகும்
ஒன்றாய்க் கொண்டே ஓர் உருவாகிக் 
கன்னிப்பெண்ணாய் கண் முன் நின்ற
கவினூ றிதழே காவியச் சுவையே,
கனவில் மலர்ந்த கார்த்திகை நிலவே
கனலும் கவிதை வரிகளின் எழிலே

கனியே கனியில் ஊரும் ரசமே
கலையே கலையின் பொருளே அருளே 
கண்ணதாசனின் கவிதைச் சுவையே
இன்னும் எழுதாக் கவியே இசையே
இனிக்கும் சுவையை ஈனும் அழகே
இறையின் அருளால் என்னிடம் வந்த
இயல்பே, இணையே இல்லாப் பொருளே,
ஈவாய் எனவே கேளா வரமாய்
என்னைச் சேர்ந்த இன்னிசை உயிரே!
இன்றும் என்றும் இதுபோல் பொன்றா
இதயத் தழகுடன் இணைவாய் வாழ்க !


-- கி. பாலாஜி
01.07.2020
காலை 11.30

No comments: