Face Book LIKE

Wednesday, July 22, 2020

உயிருள்ள சருகுகள்


உணர்வுகள் காய்ந்தாலும் 
உதிர்ந்தேதான் வீழ்ந்தாலும் 
சருகாய் சரிந்தாலும் 
சரித்திரம் மறைவதில்லை! 

எண்ணத்தின் மூலையிலே 
எங்கோ ஓர் அறையினிலே
பனியிதழின் ஈரம் மட்டும் 
சிலிர்த்துச் சிரிக்க வைக்கும்

பார்வைகள் மட்டும் தான் 
பழுதடைந்து போனாலும்
பார்வைக்குப் பின்னிலையில் 
பசுஞ்சோலைக் குளிர் உண்டு 

வேனலில் மழை எனவே 
பாலையிலே பனி எனவே 
வெண்பளிங்கு மனமுண்டு 
வெதுவெதுப்பாய் நினைவுண்டு

நீறாய் பூத்திருந்த 
நிலையினிலும் அதனுள்ளே 
நெருப்பின் சூடுண்டு 
நினைவின் மனமுண்டு!

உதிர்ந்த சருகினிலும் 
உயிருண்டு உணர்வுண்டு 
ஒரு சில மனங்களதை 
உயிர்ப்பிக்கும் குணமுண்டு!

--- கி.பாலாஜி
26.06.2020
இரவு 11.30

No comments: