Face Book LIKE

Saturday, March 11, 2017

போதி மரம் !



பால்வெள்ளி நிலா வீசும்
பகட்டுத்தா ரகைகள் மின்னும்  
பலவண்ண நிறங்கள் காட்டும்
வான மேயென் கல்விச் சாலை !
    வான மேயென் கல்விச் சாலை !
    வாழ்வினைப் பயக்கும் சோலை !

நேற்றைக்கு அழுமாற் போலே 
அமுதத்தைப் பொழிந்த வானம்
இன்றைக்குத் தெளிவாய் நின்று 
சிரிக்கின்ற தென்னே யென்றேன்!

எல்லையற்ற தன்மை கண்டென் 
எண்ணமும் விரியக் கண்டேன் 
சிந்தனை, வானம் போலே 
விரிந்தாலே விடியும் என்றேன் !

எழிலார்ந்த காவும் கண்டேன்
எத்தனையோ மலர்கள் கண்டேன் 
முன்னின்ற மலரின் செடியில்
முள்ளொன்றும்  இருக்கக் கண்டேன் 

இன்பங்கள் என்றும் உண்டு
இடையிடையே துன்பம் உண்டு
என்பதை உணர்த்தும் பாங்கில் 
முள்ளதுவும் சிரிக்கக் கண்டேன்

வண்ணத்துப் பூச்சி பூவைச் 
சுற்றிவந்தமரக்   கண்டேன் 
சுவையான தேனை யதுவும்
சுவைத்துண்ணும் பாங்கு கண்டேன் 

புவிவாழ்வு சிறிதென் றாலும் 
பூவினில் தேனைப் போலே 
நிறைந்திடும் இனிமை உண்டு
நீயதை உணரல் வேண்டும் 

என்றெனக் குணர்த்தும் வண்டு
எண்ணத்தில் அமர்ந்து கொண்டு 
ஏழிசை கீதம் ஒன்று 
தன்னுள்ளே பாடிக் கொண்டு !

இதுநாளும் தேடித் திரிந்த 
குருவைநான் கண்டுகொண் டேன் 
காண்கின்ற பொருள்க ளெல்லாம் 
குருவேயென் றுணர்ந்து கொண்டேன் 

'எப்பொருள் யார்யார் வாய்க் 
கேட்பினும் அப்பொருள் தன்னில்'
உறைகின்ற உண்மை தன்னை
உணர்த்துமோர் குருவைக் கண்டேன் !

--கி.பாலாஜி
05.08.2016

Wednesday, March 8, 2017

மகளிர் தினம்தினம்

மகளிர் தினம் தினம்
_____________________
மாலையாய் வாழ்வில் நுழைந்து
மதலையால்
இல்லம் நிறைத்து,
மனமாளும்,
மனையாளும்
மனைவியாய்
இல்லுள்ளோர்
இதயம் நிறைத்து,
என்றென்றும்
எல்லோர் வாழ்வும் மலர்மணம்
பரவச் செய்யும்
மகளிருக் கொவ்வொரு நாளும் மங்கலப் பெருநா ளென்போம்
நாம்
மாதவம் செய்தோ ரென்போம் !
--மகளிர் தின வாழ்த்துக்கள் !
----கி.பாலாஜி
08.03.2017
பகல் 12 மணி