உணவும் உடுக்கையும்
இழந்த உழவனின்
இடுக்கண் களைவ தாரிங்கே ?
உண்பதோர் நாழி
அளப்பதற் காளில்லை
உடுக்கும் நாலுமுழம்
கிடைக்க வழியில்லை
மயிர்போயின் வாழாக்
கவரிமான் போலிங்கு
வாழ்ந்தும் ஆயிற்று !
சுவாசிக்கும் காற்றுக்கும்
விலை கேட்கும் காலம்வரும் !
வீதியில் விழுந்து
புரண்டலையும் நேரம் வரும்!
பிச்சையோ நாம் கேட்கின்றோம்?
பிழைக்க வழி யாமறிவோம் !
பிழைத்தும்மைப் பேணவும்
யாமறிவோம்!
வீழ்ந்துலகைக் காக்கின்ற
மழைத்துளியை
வீணாக்கி விடவேண்டாம் !
விவசாயம் செய்வதற்கு
வகை செய்தால்
அதுபோதும்!
வீதிவரை வரும் தென்றல்
வீட்டினுள்ளும் நுழைந்தெம்மை
நலன் விசாரிக்கும்
நாள்தோறும்!
விவசாயம் செய்திடவே
வகை செய்து தாரும் !
விவேகம் அதுவே !
விளக்கமும் அதுவேதான் !
சுழன்றும் ஏர்ப் பின்னதே
உலகென்பார்!
சுழன்று கொண்டேதான்
இருக்கின்றான் உழவன் !
துன்பத்தில்
உழன்று கொண்டும்தான் !
உணவின்றி நாட்டின்
உழவன் மரிப்பதுவோ ?
உணவை அளிக்கின்ற அவனன்றோ
உலகின் மூத்தகுடி !
உணர்வீர் அவன் பெருமை!
உணவின்றி அவன்மரித்தால்
உலகே மரிப்பதுபோல் !
அன்னை மனம் நொந்தால்
அவர்மக்கள் வாழ்வாரோ
வளம்பெற்று ?
--கி.பாலாஜி
10.04.2017
மாலை 4.15