இயற்கையின் சீற்றம் இயல்பே !
------------------------------------------------------------
கணக்கிலடங்காக் குற்றம் புரிந்தோம்
காலத்தினையே சினம் கொளச் செய்தோம்
காட்டினை அழித்து நாட்டினைப் புரிந்தோம்
கட்டிடங்களைக் காடாய் வளர்த்தோம்
சூழ்வெளி கெடுத்துப் பாழ்வெளி படைத்தோம்
சுந்தரக் காற்றின் சுதந்திரம் கெடுத்தோம்
ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் துளைத்தோம்
அருமை கிராமச் சூழலை அழித்தோம்
செயற்கை உரத்தைச் சேர்த்துத் தெளித்தோம்
இயற்கை வித்தின் வீரம் அழித்தோம்
இயற்கை உரங்களை இலையெனச் செய்தோம்
இன்னரு ளமுதின் தரத்தைக் குறைத்தோம்
தொழில்வள மதனைக் கூட்டிட நினைத்து
எழில்வள மனைத்தும் இழந்தே நின்றோம்
தொன்மைக ளெல்லாம் தோற்றுத் தொலைத்தோம்
தொல்பொருள் பலவும் போயின களைந்தோம்
இத்தனை செய்தும் இன்னல்கள் புரிந்தும்
இயற்கை அன்னை பொறுமை காத்தாள்
எல்லை மீறிட அன்னை சினந்தாள்
இருக்கும் அழகை அழித்திட முனைந்தாள்
கண்கெட் டழிந்தோம் கதிரவ னொளியைக்
கண்டிட விழைந்தோம் காலம் கடந்தோம்
எத்தனை பிழைகள் யாம் புரிந்தாலும்
இத்தனை சீற்றம் தகுமோ தாயே !
அத்தனை பேரும் உன்மக வன்றோ
அத்தனை அழகும் உன்னழ கன்றோ
எத்தனை வளங்கள் அழிந்து போயின
எத்தனை உயிர்கள் மடிந்து போயின !
இதுபோல் தவறுகள் இனி நாம்புரியோம்
இன்னல்க ளிழைத்தோம் இக்கணம் அறிந்தோம்
எம்மை ஒறுத்தது போதும் நிறுத்தாய் !
எம தன்பேநீ என்றும் எம் தாய் !
அன்னை சினத்தால் அழித்தவை யனைத்தும்
அவளே தருவாள் தவறுகள் மறப்பாள்
அவள் இனிநினைத்தால் அனைத்தும் மாறும்
அவள்கண் திறந்தால் பொழுதுகள் புலரும்
காலை மலரும் கதிரவ னொளிரும்
பூவைப் போலப் பொன்னொளி படரும்
பொருந்திய வளங்கள் போற்றிக் காத்திடப்
போயிடும் துயரம் புல்நுனிப் பனியென !
--கி.பாலாஜி
ஆகஸ்ட் 17 2018
(Written during #KeralaFloods )