ஓடிச்சலித்த பின்னே....
-------------------------
ஓடிச்சலித்த பின்னோர்
ஓரத்தே அமர்ந்து கொண்டு,
ஓடிவந்த பாதைகளை
நினைவுகளில் அசைபோட்டு
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
உணரத் தலைப்பட்டேன்!
எத்தனை பேருக்கு
என்னால் உபகாரம்?
எத்தனை உள்ளத்தில்
என் செயலால் பாதிப்பு?
எண்ணங்கள் எழுதிவந்த
எழிற்கோலம் சிலகாலம்....!
எதிராளி உளக்கோலம்
சிதைக்கின்ற சுடுசொற்கள்
நானுரைத்து, நல்லவரின்
நிம்மதி பறித்ததுண்டோ?
நல்லதென நான் நினைத்து
உரைத்திட்ட மொழியெல்லாம்
நாலுபேர் மனங்களிலே
நாயகமாய் நின்றதுண்டோ?
நாளுக்கோர் நினைவாய்
நன்மைகளே கனவுகளாய்,
நாளைய கனவுகளின்
நனவுக்கு நிதமேங்கி,
நெஞ்சம் நலிகின்ற
நேரத்தில் பாட்டிசைத்து
வஞ்சம் நெஞ்சத்தில்
தங்காத வரம் வேண்டி,
வாழ்வுச் சுமை நீங்க
வாயார உரையாடி
உள்ளம் புன்னகைக்க
உள்ளோர் சிரித்திருக்க,
ஒவ்வோர் வார்த்தையிலும்
உண்மை நிலைத்திருக்க
உரையாடி, உறவாடி
வாழ்ந்திருந்த காலமெலாம்.......
எங்கோ ஒளிந்திருந்து
எனைக் கேலி பேசிடுதே!
என்னை ஏறெடுத்துப்
பார்த்திடவும் நாணிடுதே!
***** --பாலாஜி--
24.07.1981
No comments:
Post a Comment