'வாராது வந்த மாமணியைத் தோற்றோமோ'
காணாமல் தவிக்கின்றோம்
அந்தக் கண்ணின் மணியதனை,
கேளாமல் தெய்வமீந்த
வரத்தின் பேரொளியை !
பொழுது விடிந்தால்
புலனத்தில் அவன்பதிவு
காணாமல் நாமென்றும்
கடந்து சென்றதில்லை!
பாரதியைக் கொண்டாடிப்
பாரெங்கும் பவனிவரும்
பதிவுகள் பலதந்து
போற்றிப் பரவிடுவான்!
தேசத்தின் நலமொன்றே
தெய்வமெனப் போற்றிடுவான்
தீய வேடங்கள்
அனைத்தையுமே தன்னெழுத்தால்
கீறிக் களைந்திடுவான்!
கிழித்தே எறிந்திடுவான்!
பத்திரிகை தருமத்தைப்
பாலித்தவன் இவனே!
பகட்டற்ற கருணையெனும்
சொல்லுக்குப் பொருளதனைக்
காரியத்தால் காண்பித்துக்
கண்களை நிறைத்திட்டான்!
மறைந்துவிட்டான் எனச்
சொல்வதெல்லாம் பொய்!
மனதில்
நிறைந்துவிட்டான் என்ற
நினைவொன்றே மெய் !
மந்திரச் சொற்களால் எத்தனை
மனங்களுக்கு பலம் தந்தான்!
மனதார உடனிருந்து
மனங்களின் வலிதீர
மருந்திட்டு மாயம்
பலபுரிந்தான்!
மற்றுள்ளோர் அவன்செய்த
நற்செயல் தனைப்புகழ்ந்து
சொல்கையிலே அல்லவோ
அறிகின்றோம் நாமும்
அது குறித்து,
அந்த
அன்பான மனம் குறித்து !
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல்
எத்தனை செய்துள்ளான்
என்பதனை நாமும்
இன்றன்றோ அறிகின்றோம்!
இதயம் நலிகின்றோம்!
இதனைப் புரிந்துகொள்ள
இப்படிப் பட்டதோர்
இழப்போ தேவையென
நெஞ்சம் கனலாகி
நெருப்பினிலே வேகின்றோம் !
வெந்து தணியுமோ
இந்த வேதனைக்காடு !
வெந்துயர் சாக்காட்டின்
மனமென்னும் வீடு !!
--கி.பாலாஜி
05.07.2018