காற்றில் கலந்தான் தம்பி கணேசன்
காவிரி ஓடும் குடந்தையில் வளர்ந்த
ராஜி ராமநாதனின் புத்திரன்
ரம்மிய மாகயெம் சிந்தையி லமர்ந்தோன்!
மனதை நிறைக்கும் மந்திரச் சிரிப்பும்
பொங்கும் இளமை பூத்த உருவும்
இளமை மாறா திருக்கும் பேச்சும்
இயல்பாய் அமைந்த அருமைத் தம்பி !
இந்த உருவம் ஒன்றே என்னுள்
என்றும் நிறைந்து நிலைத்து நிற்கும்!
இனிமை பகர்ந்து எண்ணம் நிறைக்கும்!
மறையாச் சுடராய் மனதில் நிலைக்கும்!
அவனுடன் கழித்த நாட்கள் அனைத்தும்
அரை நொடிக்குளென் மனதில் பொங்கி
வெள்ளம் நிறைந்த காவிரி ஆறாய்
வெற்றிலைக் கொடிக்கால் பசுமை வெளியாய்
அலையென மோதிக் கலைந்து செல்லும் !
அனைத்தும் நினைவை நிறைத்து வெல்லும் !
சித்திர வடிவிலோர் சின்ன கணேசன்
சிறிய அறைக்குளோர் சைக்கிளில் லமர்ந்து
சுற்றிச் சுற்றி வந்தெமை நோக்கிப்
பெருமிதத் துடனே பார்த்தவோர் பார்வை !
இன்றும் மனதில் அகலா திருக்குமிக்
காட்சி யொன்றே குடந்தை சென்ற
நானும் தங்கை இருவரும் முதலில்
சின்ன கணேசனைக் கண்டதோர் கடிகை!
அன்றெ மக்குப் பிராயம் எட்டு
அவனோர் இரண்டு வயதுக் குழந்தை!
நாட்கள் கழிந்தன நலன்கள் பெருகின
நகர மேனிலைப் பள்ளியதனில்
நல்லாசிரியன் எனப் பெயர் பெற்றான் !
நலமே நவின்றான் நலம் பல புரிந்தான் !
நல்லதோர் நண்பன் ஆனான் எனக்கும் !
அவனுடன் கழித்த நாட்கள் இனிக்கும் !
காலம் வரையும் கோலம் கசக்கும்
சில பல நினைவுகள் சிந்தையில் நிலைக்கும் !
வாணியின் அருளால் பெற்ற வரத்தினால்
வளர்த்த மாணவ மணிகள் எத்தனை !
அறிவும் அன்பும் ஒன்றாய் அளித்த
ஆசிரியப் பெருந்தகை இவனே அன்றோ !
சரஸ்வதி தேவி அருளிய செல்வம்
சமமாய் பகிர்ந்து கொடுத்தத னாலோ
ஸரஸ்வதி பூஜா தினமாய் பார்த்து
அழைத்துக் கொண்டாள் அன்னை தன்னிடம் !
நினைவில் மாத்திர மேயினி யனைத்தும்!
நெஞ்சம் கனத்த நிலையில் மாத்திரம் !
நீறுபூத்த நெருப்பாய் மனங்கள்
கனன்று கனன்று கவியும் உள்ளில் !
காலக் காற்று வீசிடும் வீச்சில்
கனத்த நினைவும் பஞ்சென மெலியும் !
கண்கள் சுழன்று விரியும் கனவில் !
காலை விடியும் காரியம் புரியும் !
--சிந்தையில் நிலைத்தயெம்
சின்ன கணேசனின்
சிற்ப நினைவை
வடித்த வரிகள்!
கி.பாலாஜி
அக்டோபர் 18 2018