Face Book LIKE

Thursday, January 9, 2020

காவியம் அளந்த கண்ணன்

ராகம்: அமீர் கல்யாணி

மார்கழி முழுவதும் மலர் தூவல்
மனதை நிறைத்திடும் திருப்பாடல்
கடலைக் கடைந்திடும் அருட்தேடல்
கனவுகள் மெய்ப்படும் விளையாடல் !

கருணை வேண்டிக் கதவுகள் தட்டிக்
கைகளை ஏந்தி நின்றேன்
கருணாமயனும் கண்களின் அசைவால்
காவிய மளந்து தந்தான்

கானம் தோறும் கண்ணன் நினைவே
காணு மிடமெலாம் கண்ணன் உருவே
கைகளை நனைத்தால் கவளம் கண்ணன்
கண்களை அடைத்தால் கனவும் கண்ணன்

கறவை இனங்களின் கரைதலில் கண்ணன்
பறவை கணங்களின் இரைச்சல் கண்ணன்
பச்சிள மதலை மொழிகளில் கண்ணன்
பாவையர் பாடும் பாடலில் கண்ணன்

கண்ணன் அன்றிக் கனவுகள் உண்டோ
கதைகள் பகரும் காட்சிகள் உண்டோ
கண்ணன் நினைவுகள் ஒன்றே போதும்
கவலைக ளெல்லாம் மறந்தே போகும் !

கி.பாலாஜி
08.01.2020
பகல் 12

No comments: