Face Book LIKE

Monday, December 10, 2018

காணாத கோணத்தில் கவியின் வரவு !

காணாத கோணத்தில் கவியின் வரவு !
-----–----------------------------------------------
வெந்தழலும் தண்ணீரும்
தண்மனதின் வெண்சிறகை
விரித்துச்  சிரித்திடவும் .
சிரித்து மகிழ்ந்திடவும்,
சீரியதோர் செந்தமிழில்
  வரியெழுதும் கவியங்கே
  வந்து பிறக்கின்றான்  !
  வான்தொட்டு முழங்கி
  வார்த்தைக ளிசைக்கின்றான்  !

எங்கெங்கும் வண்ணமயம்
எண்ணங்கள் அன்புமயம்
ஏந்திவரும் சொற்களெல்லாம்
இசைகொண்ட நாதலயம் !

பண்ணும் பதமும் தன்
பாதையிலே ஜதிபோடப்
பேச்சற்ற மௌனங்கள்
பாடுகின்ற ராகலயம் !
   வரியெழுதும் கவியிங்கே
   வந்து பிறக்கின்றான் !
   வான்தொட்டு முழங்கி
   வார்த்தைக ளிசைக்கின்றான்  !

வான்மழையே தேன்துளியாய்
தெய்வீக இசை பொழிக !
வண்டினமே மகரந்தக்
கவிபாடிப் பறந்திடுக !
    வரியெழுதும் கவியிங்கே
    வந்து பிறக்கின்றான் !
    வான்தொட்டு முழங்கி
    வார்த்தைக ளிசைக்கின்றான்  !

--கி.பாலாஜி
03.05.2018
12.15 am

Monday, December 3, 2018

இரு கை ஓசை



இரு கை ஓசை கேட்கிறதே ! 
இதயத்தின் பாடல் இனிக்கிறதே!
சிந்தனைப் பறவை எழுந்து நின்றே 
சிறகுக ளடித்துப் பறக்கிறதே !                  (இரு கை)

விரிகின்ற வானம் தூரமில்லை
விடியல் மனம் விட் டகல்வதில்லை
அடிக்கின்ற அலைகள் ஓய்வதில்லை
ஓய்ந்திட நின்றால் ஏது எல்லை !              (இரு கை)

அன்பெனும் அட்சய பாத்திரத்தில் 
அளைந்திடக்  கைகள் துணையுண்டு 
அள்ளி வழங்கிட மனம் உண்டு 
ஆனந்தம் பகிர்ந்திட இடமுண்டு                (இரு கை)

இதயத்தை அள்ளி இறைத்திடு வா 
இறைவன் அளித்த வரம் இது வே 
இன்பத்தை எங்கும் கண்டிடலாம் 
இருப்பதைக் கொடுத்து வென்றிடலாம்   (இரு கை)

--கி. பாலாஜி
03.12.2018