Face Book LIKE

Sunday, October 20, 2019

மனதில் நிறைந்த தவம்

மனதில் நிறைந்த தவம்
                  *******
அலைந்து திரிந்துழைத்து
எமை ஆளாக்கி வைத்தவோர்
அன்புத் திருவுருவம் அப்பா
ஆன்ற செய்கைகளைத்
தம்செயலா லெமக்குணர்த்தும்
தன்னிகரே  இல்லாத அப்பா

அதிகாலை கண் விழித்துப்
பார்க்கையிலே அருகினிலே
என்றும் இருந்ததில்லை அப்பா
நாங்களெல்லாம் நலமாக
இருந்திடவே நாளெல்லாம்
ஓயாமல் உழைத்திருந்த அப்பா

அப்பாவின் அகராதி
தனிலென்றும் ஓய்வென்ற
சொல்லொன்றே நாம்கண்ட தில்லை‌
அன்பென்ற சொல்லுக்கோ
அழகாய் பொருள் விளக்கம்
அதில் கண்டுநாம் மலைத்த துண்டு

தான் கொண்ட அன்பைச்
சொல்லால் விளக்கும் ஓர்
தகைமை அவரிடத்தில் இல்லை
தான் வேறு தன் சுற்றம்
தாம் வேறு என்றென்றும்
எண்ணிப் பார்த்ததுவும் இல்லை

தன் மனைவி தன் மக்கள்
தான் மட்டும் வாழ
என்றென்றும் எண்ணியதே இல்லை
ஊர் விட்டு ஊர் சென்று
உழைத்துப் பொருளீட்ட
உய்ந்தா ருடன்பிறந்தோ ரெல்லாம்

உற்றார் எல்லோரும்
ஓர்குடும்பம் தாமெனவே
ஒன்றாய் வாழ்ந்திருந்தார் அன்று
அத்தை சித்தப்பா
அனைவருமே அவர் மகனைத்
தன் மகவாய்த் தான்பார்த்தார் என்றும்

உறவின் வலிமை யெலாம்
தாம் செய்த செயலாலே
தெளிவாய் புரிய வைத்த அப்பா
பதிலா யெதனையுமே
எதிர்பார்த்தல் தவறென்றும்
தெளிவாய் புரியவைத்த அப்பா

தென்பொதிகைத் தென்றலெனச்
சிந்தையிலே நின்றுவிட்ட
தண்மையதன் திருவுருவம் அப்பா
நினைவுகளில் நீந்தி வரும்
தேமதுரத் தமிழிசையாய்
மனதில் நிறைந்த தவம் அப்பா !

---கி.பாலாஜி
28.08.2019
பகல் 10.30

No comments: