Face Book LIKE

Monday, March 23, 2020

அமைதிப் போர்

அமைதிப் போர்

சோலைக் குயிலின் கூவல் கூட
நின்று விட்ட அமைதி !
சாலை களிலே காற்று கூடச்
சுழலா திருந்த அமைதி!

வாக னங்கள் ஒன்றும் இல்லை
வண்டிச் சத்தம் ஏதும் இல்லை
அங்கும் இங்கும் ஓடுகின்ற
சிறுவர் கூட்டம் கூட இல்லை 

பூங்காக் களிலே நடை பழகும்
மாந்தர் யாரும் கண்ணில் காணோம்
பூக்கள் கூடப் புன்னகை மறந்து 
சிந்தை குவித்து நிற்கிறதே !

பர பரப்பு என்பது எவரின் 
மனதிலும் கூட நிற்க வில்லை 
சகத்தில் எங்கும் அமைதியின் ஆட்சி 
சலனங் களுக்கோ பெருவீழ் ச்சி !

கொரோ னாவெனும் கிருமி அரக்கன்
குவ லயத்தில் ஆட்சி செய்து
கொன்று குவிக்கும் மக்கள் கூட்டம்
கணக்கில் என்றும் அடங்க வில்லை 

பேயை ஆட்சி செய்ய விட்டுப்
பிணத்தைத் தின்னும் சாத்திரமாய்
சமைந்து நாமும் நிற்க லாமோ
சமர்க்களம் புகுந்து செயல்புரி வோம்

நோயை நாமும் எதிர்த்து நிற்போம் 
நோவை மறந்து நோன்பு நோற்போம் 
இயற்கை தந்த மூலிகை யவையாம் 
இனிய வேம்பு மஞ்சள் துளசி

இஞ்சி எலுமிச் சைகளின் உதவி
தன்னைப் பெற்று எதிர்ப்புச் சக்தி
பெருக்கிக் கொண்டே போர்புரி வோம்
பேரிடர் தன்னைத் தாண்டிடு வோம்

கைகளை நன்றாய் சுத்தம் செய்து 
களத்தில் நாமும் இறங்கிடு வோம் 
ஒருவரை ஒருவர் அணைக்கா தென்றும் 
ஓரடி தள்ளியே நின்றிடு வோம்

இணைந்து நின்று செய்யும் வேள்வி 
அதனால் நன்மை பெற்றிடு வோம் 
இணைந்த கிருமிச் சங்கிலி யதனை 
இடையில் நாமும் வெட்டிடு வோம்

இருக்கும் இடத்தில் இருந்திடு வோம்
எங்கும் கூடுதல் நாம்தவிர்ப் போம்
சுத்தம் ஒன்றே சுகமாம் என்னும்
தத்துவம் தனைப்பின் பற்றிடு வோம்

பரவிய நோயை அழிப் பதற்குப்
பாடாய் படும்நம் தோழர்களைப் 
போற்றி நாமும் கர வொலியால் 
ஊக்கு வித்தே உயிர்தரு வோம்

எங்கும் அமைதி காத்திடு வோம் 
என்றும் இல்லத் திருந்திடு வோம் 
ஓய்வு என்பது பொருள் இல்லை 
ஒன்றாய் எதிர்த்தல் பொருளா கும்

அரசின் சொல்லை மதித்திடு வோம் 
அமைதி காத்து வழி நடப்போம் 
உறுதிமொழியை நாம் எடுத்த 
கணத்தில் கண்ட காட்சி யெலாம் 

மனதில் கடந்து சென்ற துவே 
மறையா தென்றும் நிலைத்த துவே 
போர்க்கா லத்தில் பெறும் துன்பம் 
தாற்கா லிகமென நம்பிடுவோம் !

--கி.பாலாஜி
22.03.2020

அணையா விளக்கு


Regret to announce about the demise of my Uncle (Father's Younger Brother) Sri K.Kalyanaraman, which happened this afternoon.

அணையா விளக்கு
--------------------------------
பழுத்த இலைகளை 
மரத்தில் பார்க்கையில் 
மனதில் நிறையும் 
மழைமேகம்!
மஞ்சள் இலைக்கு 
நடுவில் ஓடும் 
பழுப்பு நரம்புகள் 
பறைசாற்றும்
பாரில் இதுவரை 
கண்ட பலப்பல 
அனு பவங்களின் 
அழுத்தங்கள்!
ஒவ்வொரு முறையும் 
காற்றில் அசையும் 
ஒவ்வொரு  அசைவிலும்
சங்கீதம்  
தனையே கண்டு 
சிலிர்த்து நின்ற 
சீரிய அனுபவ 
சிங்காரம் !  

அனுபவத்தால் பழுத்து நீயும் 
சற்றே அசந்து வீழ்ந்தாய் !  
ஆதாரத்தில் ஆட்டம் கண்டு 
அழியாத் துயிலில் கிடந்தாய்!

வலிகளைக் கூட வரமாய் எண்ணும் 
அனுபவ ஞானம் அடைந்தாய் ! 
உதிரும் நேரம் வந்த போதும் 
உணர்வால் ஏற்கிற ஞானம்!

கதிராய் கண்முன் தெரியும் ஒளியைக் 
கண்டு மலரும் ஞானம்!
கதியாய் கமலத் திருவடி பற்றிக் 
கண்ணிமை சிரிக்கிற ஞானம்!

ஆரூர் குளமாம் கமலா லயமென
மனதில் குளிரும் ஞானம்!
ஆரூர் செல்வன் அருட்தியாகேசன்
அருளால் விளையும் ஞானம் !

நீட்டிய கைகளில் நீலோத்பலமென 
மலராய் அணையும் ஞானம்!

அழகாய் மனதில் அமைதி நிலைக்க
அன்பின் ஊற்றாய் பெருகி
உலகத் தளைகள் உன்னை விலக்க
உண்மையே வந்துனை அழைக்க,

உன்னை நீயே மறந்தாய்!
உமையவள் திருவடி நினைந்தாய்!
மாயத் தளைகள் விலகி
மனமும் உயிரும் இணைய
காலம் கடந்து 
பயணம் சென்றாய் !
கருணை ஒளியாய் 
நின்றாய் !

அன்பைப் பொழிந்து  
ஆருயிர் வளர்த்த 
அண்ணலின் இளையோய் 
வணக்கம்!
அன்றும் இன்றும் 
என்றும் எம்மில் 
உறையும் உயிரே 
வணக்கம்!
அண்ணலின் பாதச் 
சுவடைப் பற்றிய
அன்பின் உருவே 
வணக்கம்!
அறுவர் கூடப் 
பிறந்த பிறப்பே
அணையா விளக்கே 
வணக்கம்!

எங்கோ இருந்து 
எழுவராய் எம்மை 
ஆசீர்வதித்து 
அருள்வீர்!
என்றும் எம்முள் 
நிறைந்து நின்று 
நல்வழி காட்டித் 
தருவீர் !

கி.பாலாஜி
22.03.2020
மாலை 7 மணி

Tuesday, March 10, 2020

நட்பென்னும் நாணயம்

நட்பு என்பது 
நாணயம் ஒன்றின் 
இரண்டு பக்கங் கள் . 
ஒன்றில் ஓயாச் 
சிரிப்பு கேட்கும் 
உன்னத மணங்கள் 
வீசும் !
ஒன்றின் மூலையில் 
முணுமுணுப் புகளின் 
சோகக் குரலும் 
கேட்கும் !

சிரிப்பின் பக்கம் 
நட்பின் தழுவலில் 
நனையும் இதயத்தின் 
ஆசை !
இன்னொரு பக்கம் 
பிரிந்த நட்பின் 
அழியாச் சோகத்தின் 
ஓசை !

இரண்டு ஓசையும் 
ஒன்றாய் கேட்கும் 
காலங்கள் என்றும் 
குறைவே !
இரண்டும் ஒன்றாய் 
கேட்கும் காலம்,
நட்பைப் புரிந்த 
உணர்வே !

உறவு என்பதின் 
தொடக்கத்தில் பிரிவின் 
இழையும்இணைந்தே
இருக்கும்!
பிரிவின் காலம் 
அணையும் போது 
உறவின் தாக்கம் 
பேசும் !

வாழ்வுக் கென்றும் 
இரண்டு பக்கம் 
உள்ளதை உணருக
மனமே !
உணர்ந்தே அறிவின் 
ஒளியைத் தூண்டி 
உண்மையை அறியுக 
மனமே !

கி.பாலாஜி
06.03.2020
காலை 9.30

இதய தாகம்

இதய தாகம்
ராகம்: சிவரஞ்சனி

இதயம் முழுதும் வசந்த மழையில் 
நனைந்த பின்னாலும் தாகம்...
நனைந்த பின்னாலும் தாகம்...    (இதயம்)

அன்பின் வெள்ளம்  
உருண்டு புரண்டென் 
உள்ளில் பொழிந்து வழிந்தே..
சென்ற பின் னாலும்  ஏக்கம்...
சென்ற பின்னாலும் ஏக்கம்..         (இதயம்)

ஒன்றுமில்லாமல் வரண்டதோர் காலம் இருந்ததை நீ யறி வாயோ இதயம் 
வெந்ததை நீ யறிவாயோ ...
திடுமெனத் தோன்றி 
அளவின்றிப் பொழிந்தால் 
போதுமென்றோ  சொல்லத் தோன்றும் - இது போதும் என்றோ சொல்லத் தோன்றும் 
(இதயம்)

பொழிகின்ற வரையில் 
பொழிந்தே தீர்த்திடென்  
மோகங்கள் மாய்ந்தே போகும் அதன் வேகங்கள் அழிந்தே போகும்

வடிகின்ற வெள்ளம் வடிந்தே போகும் 
மீண்டும் வேனல் காலம் !
சக்கரம் என்பது சுழன்றே தீரும் 
முடிவே தொடக்கம் ஆகும் - அது
மறுபடி முடிவினில் தொடங்கும்     (இதயம்)

கி.பாலாஜி
11.11.2019
இரவு 11.30