அணையா விளக்கு
Regret to announce about the demise of my Uncle (Father's Younger Brother) Sri K.Kalyanaraman, which happened this afternoon.
அணையா விளக்கு
--------------------------------
பழுத்த இலைகளை
மரத்தில் பார்க்கையில்
மனதில் நிறையும்
மழைமேகம்!
மஞ்சள் இலைக்கு
நடுவில் ஓடும்
பழுப்பு நரம்புகள்
பறைசாற்றும்
பாரில் இதுவரை
கண்ட பலப்பல
அனு பவங்களின்
அழுத்தங்கள்!
ஒவ்வொரு முறையும்
காற்றில் அசையும்
ஒவ்வொரு அசைவிலும்
சங்கீதம்
தனையே கண்டு
சிலிர்த்து நின்ற
சீரிய அனுபவ
சிங்காரம் !
அனுபவத்தால் பழுத்து நீயும்
சற்றே அசந்து வீழ்ந்தாய் !
ஆதாரத்தில் ஆட்டம் கண்டு
அழியாத் துயிலில் கிடந்தாய்!
வலிகளைக் கூட வரமாய் எண்ணும்
அனுபவ ஞானம் அடைந்தாய் !
உதிரும் நேரம் வந்த போதும்
உணர்வால் ஏற்கிற ஞானம்!
கதிராய் கண்முன் தெரியும் ஒளியைக்
கண்டு மலரும் ஞானம்!
கதியாய் கமலத் திருவடி பற்றிக்
கண்ணிமை சிரிக்கிற ஞானம்!
ஆரூர் குளமாம் கமலா லயமென
மனதில் குளிரும் ஞானம்!
ஆரூர் செல்வன் அருட்தியாகேசன்
அருளால் விளையும் ஞானம் !
நீட்டிய கைகளில் நீலோத்பலமென
மலராய் அணையும் ஞானம்!
அழகாய் மனதில் அமைதி நிலைக்க
அன்பின் ஊற்றாய் பெருகி
உலகத் தளைகள் உன்னை விலக்க
உண்மையே வந்துனை அழைக்க,
உன்னை நீயே மறந்தாய்!
உமையவள் திருவடி நினைந்தாய்!
மாயத் தளைகள் விலகி
மனமும் உயிரும் இணைய
காலம் கடந்து
பயணம் சென்றாய் !
கருணை ஒளியாய்
நின்றாய் !
அன்பைப் பொழிந்து
ஆருயிர் வளர்த்த
அண்ணலின் இளையோய்
வணக்கம்!
அன்றும் இன்றும்
என்றும் எம்மில்
உறையும் உயிரே
வணக்கம்!
அண்ணலின் பாதச்
சுவடைப் பற்றிய
அன்பின் உருவே
வணக்கம்!
அறுவர் கூடப்
பிறந்த பிறப்பே
அணையா விளக்கே
வணக்கம்!
எங்கோ இருந்து
எழுவராய் எம்மை
ஆசீர்வதித்து
அருள்வீர்!
என்றும் எம்முள்
நிறைந்து நின்று
நல்வழி காட்டித்
தருவீர் !
கி.பாலாஜி
22.03.2020
மாலை 7 மணி
No comments:
Post a Comment