அமைதிப் போர்
சோலைக் குயிலின் கூவல் கூட
நின்று விட்ட அமைதி !
சாலை களிலே காற்று கூடச்
சுழலா திருந்த அமைதி!
வாக னங்கள் ஒன்றும் இல்லை
வண்டிச் சத்தம் ஏதும் இல்லை
அங்கும் இங்கும் ஓடுகின்ற
சிறுவர் கூட்டம் கூட இல்லை
பூங்காக் களிலே நடை பழகும்
மாந்தர் யாரும் கண்ணில் காணோம்
பூக்கள் கூடப் புன்னகை மறந்து
சிந்தை குவித்து நிற்கிறதே !
பர பரப்பு என்பது எவரின்
மனதிலும் கூட நிற்க வில்லை
சகத்தில் எங்கும் அமைதியின் ஆட்சி
சலனங் களுக்கோ பெருவீழ் ச்சி !
கொரோ னாவெனும் கிருமி அரக்கன்
குவ லயத்தில் ஆட்சி செய்து
கொன்று குவிக்கும் மக்கள் கூட்டம்
கணக்கில் என்றும் அடங்க வில்லை
பேயை ஆட்சி செய்ய விட்டுப்
பிணத்தைத் தின்னும் சாத்திரமாய்
சமைந்து நாமும் நிற்க லாமோ
சமர்க்களம் புகுந்து செயல்புரி வோம்
நோயை நாமும் எதிர்த்து நிற்போம்
நோவை மறந்து நோன்பு நோற்போம்
இயற்கை தந்த மூலிகை யவையாம்
இனிய வேம்பு மஞ்சள் துளசி
இஞ்சி எலுமிச் சைகளின் உதவி
தன்னைப் பெற்று எதிர்ப்புச் சக்தி
பெருக்கிக் கொண்டே போர்புரி வோம்
பேரிடர் தன்னைத் தாண்டிடு வோம்
கைகளை நன்றாய் சுத்தம் செய்து
களத்தில் நாமும் இறங்கிடு வோம்
ஒருவரை ஒருவர் அணைக்கா தென்றும்
ஓரடி தள்ளியே நின்றிடு வோம்
இணைந்து நின்று செய்யும் வேள்வி
அதனால் நன்மை பெற்றிடு வோம்
இணைந்த கிருமிச் சங்கிலி யதனை
இடையில் நாமும் வெட்டிடு வோம்
இருக்கும் இடத்தில் இருந்திடு வோம்
எங்கும் கூடுதல் நாம்தவிர்ப் போம்
சுத்தம் ஒன்றே சுகமாம் என்னும்
தத்துவம் தனைப்பின் பற்றிடு வோம்
பரவிய நோயை அழிப் பதற்குப்
பாடாய் படும்நம் தோழர்களைப்
போற்றி நாமும் கர வொலியால்
ஊக்கு வித்தே உயிர்தரு வோம்
எங்கும் அமைதி காத்திடு வோம்
என்றும் இல்லத் திருந்திடு வோம்
ஓய்வு என்பது பொருள் இல்லை
ஒன்றாய் எதிர்த்தல் பொருளா கும்
அரசின் சொல்லை மதித்திடு வோம்
அமைதி காத்து வழி நடப்போம்
உறுதிமொழியை நாம் எடுத்த
கணத்தில் கண்ட காட்சி யெலாம்
மனதில் கடந்து சென்ற துவே
மறையா தென்றும் நிலைத்த துவே
போர்க்கா லத்தில் பெறும் துன்பம்
தாற்கா லிகமென நம்பிடுவோம் !
--கி.பாலாஜி
22.03.2020
No comments:
Post a Comment