புன்னகை புரிந்தால் போதும்
எனக்குப் பேசத் தெரியாது - என்
ரசனையில் குறைவே இருக்காது!
சிறுவர் குழாத்தின்
இடையே நானொரு
சிறுவன் !
இளைஞர் குழுவின்
இடையில் நான் ஒரு
இளைஞன் !
முதியோர் கூட்டம்
தனிலே நானொரு
முதியோன் !
அனுபவம் ஒன்றே
அங்கே பேசும் !
அனைத்தும் மலராய்
மணம் வீசும் !
எனக்குப்பேசத் தெரியாது என்
ரசனையில் குறைவே இருக்காது
இலக்கிய வாதிகள்
இடையில் நானொரு
இலக்கிய ரசனை
மிக்கதோர் பிறவி !
இசைக் கலைஞர்
மத்தியில் நானொரு
இசையை ரசிக்கும்
இசைஞன் !
பேசத் தெரிய
வேண்டிய தேவை
என்றும் எனக்கு
இருந்த தில்லை !
பேசா திருக்கும்
புலமையைப் பிறரும்
மதிக்கத் தெரிந்து
மகிழ்வார் !
எனக்குப் பேசத் தெரியாது - என்
ரசனையில் குறைவே இருக்காது
அனைத்து விஷயமும்
பற்றிய அறிவு
ஒன்றும் எனக்குக்
கிடையாது !
ஆனால் அவற்றின்
ஒவ்வொரு துளியையும்
அலசி ரசித்து
மகிழ்வேன் - அதிலே
உயிர்த்து வாழ்வேன் !
எனக்குப் பேசத் தெரியாது - என்
ரசனையில் குறைவே இருக்காது!
மனமொரு மித்து
இருந்து விட்டால்
மற்றெதும் தேவை
இருக்காது !
மனதில் காணும்
இன்பம் அதனைச்
சொல்ல மொழியே
கிடையாது !
மனமொழி மற்றும்
உடல்மொழி யதனின்
உண்மை ஒன்றே
போதும் !
உலகில் காணும்
கலைஞர் எவர்க்கும்
அதுவே ஊக்கம்
ஆகும்!
எனக்குப் பேசத் தெரியாது - என்
ரசனையில் குறைவே இருக்காது
நம்மைச் சுற்றி
என்றும் நிற்கும்
நால்வகைச் சுவையின்
சிறப்பை
நாமும் புரிந்து
கொண்டு ரசித்துப்
புன்னகை புரிந்தால்
போதும்!
என்றும் இளமை
மனதில் நிற்கும்
எங்கும் மகிழ்ச்சி
பூக்கும் !
எங்கும் உவகை
ஊற்றுப் பெருகி
உலகம் நிமிர்ந்து
நிற்கும் !
எனக்குப் பேசத் தெரியாது - என்
ரசனையில் குறைவே இருக்காது !
-- கி.பாலாஜி
29.03.2020
பகல் 2.30
No comments:
Post a Comment