இயற்கை மதித்தல் !
கொற்றவை அருள் இருக்கக்
கொடுநோய்கள் விலகாதோ
பெற்றவள் மக்களையே
பேணிக் காத்திடுவாள்.
சுற்றமும் நட்புமெல்லாம்
பெற்றதாய் மட்டுமன்றோ !
சுகமீந்து காத்திடுவாள்
செம்மலர்ப் பதம் பணிவோம்!
பதினெட்டு கைகளுண்டு
பக்தர்களைக் காப்பதற்கே
பாரினில் துன்பங்களைப்
போக்கிடும் தேவியவள்
ஆடம் பரமேதும்
காட்டாமல் நாமென்றும்
அன்போடு பதம் பணிவோம்
ஆறுதல் அவள் தருவாள் !
பக்தி ஒன்று மட்டும்
பாமரர்க்குப் போதாது
பாரின் விதிகளை நாம்
மீறாமல் பணி செய்வோம்
செய்யும் பணிகளிலே
பலனேதும் பாராமல்
செய்தால் சுகமளிப்பாள்
தேவி அருள்புரிவாள்!
அன்பைப் புறக்கணித்தோம்
அனைவரும் சமமென்னும்
உண்மையை நாம் மறந்தோம்
ஊழ்வினை தொடர்ந்ததுவே
இயற்கை ஈந்திருந்த
இனிய வரங்களெலாம்
பேணிப் போற்றாமல்
பேரழிவை நாம் கண்டோம்!
இயற்கை தன்னோடு
இயைந்த வாழ்வதனை
இனியேனும் போற்றிப்
பெருவாழ்வு பெற்றிடுவோம்!
நீராற்றல் தனை மதிப்போம்
நீர்நிலைகள் காத்திடுவோம்
பேராற்றல் தனைப்பெறுவோம்
பெருமைகளை நாமடைவோம் !
கி.பாலாஜி
03.04.2020
காலை 9.30
No comments:
Post a Comment