ஏற்றுக விளக்கு
எங்கும் ஒளி மயம்
போற்றுக பாரதம்
தோன்றுக பேரொளி
மாற்றல ரெல்லாம்
சென்று ஒளியுக
ஆற்றிடும் சேவைக்
கரங்கள் மிளிருக
நன்மையைக் கருதி
நானில முழுதும்
நலமே சூழ்கென
ஏற்றும் விளக்கு
புன்மை அனைத்தும்
போவெனப் போக
புண்ணிய ரெல்லாம்
ஏற்றும் விளக்கு!
உலகம் முழுதும்
ஒன்றே ஜோதி
உள்ளம் அதனில்
விளங்கும் ஜோதி
ஊரும் நாடும்
நோய்நொடி இன்றி
உயர்ந்த மனதுடன்
ஏற்றும் ஜோதி !
நலமே சூழ்கென
நினையா மனத்தின்
நிலையாத் தன்மைய
தீமைக ளெல்லாம்
ஒற்றை விளக்கின்
ஒருதிரிச் சுடரில்
விட்டில் போலே
வீழ்ந்து மாய்க !
உள்ளத் தொளியில்
உவந்து சொல்லும்
ஒவ்வொரு சொல்லிலும்
உண்மை ஒளிருக
உலகம் எங்கிலும்
வெண்மை பரவுக
வேற்றுமை மறையுக
ஒற்றுமை மலர்க !
ஏற்றுக விளக்கு
எங்கும் ஒளி மயம்
போற்றுக பாரதம்
தோன்றுக பேரொளி !
-- கி.பாலாஜி
05.045.2020
இரவு 7 மணி

No comments:
Post a Comment