Face Book LIKE

Wednesday, October 28, 2009

கங்கா ப்ரவாஹம்

பூமியிலே புரண்டு வருகிற புண்ணிய நதியாம் கங்கையைப்பற்றி நான்கு வரிகள் எழுத நேர்ந்தது ஒரு பாக்கியம் என்று கருதுகிறேன் ! கங்கா ப்ரவாஹத்தைப்பற்றிய ஒரு வீடியோவையும் கீழே காணலாம்:

கங்கா ப்ரவாஹம்
மாதொரு பாகன் மன்னிய சிவனார்
விரிசடை மீதிருந்தே
மாது கங்கை மாறா ஒளியுடன்
மண்ணதி லேவீழ்ந்தாள் !

வீழ்ந்திடு கங்கைதன் வெள்ள மதிலே
மூழ்கிடு மானுட ரின்
வினைகள் தீர்க்கும் விளையாட் டதனை
வீறுடன் தொடங்கிட்டாள்!

ஓவென் றிரைச்சலாம் ஓங்காரத்துடன்
ஓயாப் பணி புரிந்தே
உலகம் புரந்திட உமையவள் நாதன்
உயிரா யனுப்பிவைத் தான் !

அன்பே உருவாம் அரும்பழ மென்னும்
அண்ண லிடமிரு ந்தே
புறப்படு கங்கை புண்ணிய நதியெனும்
புகழுட லெடுத் தாளே !

போகும் வழியில் புண்ணிய கங்கை
புகலிடம் தேடி வந்த
புல்லையும் கல்லையும் கூடத் தனது
புணர்ச்சியில் விளக்கிட்டாள் !

பருவம் என்னும் போராட் டத்தால்
பகலவன் காய்ந்தா லும்
உருவம் மாறா துயிர்களைக் காக்க
ஊற்றாய் பெருகிட்டாள்!


உயிர் பிரிந்தேக உடல் மண் ணாக
உலகினர் விடைகூ றிக்
காசியெனும் வழிச் செல்லும் கங்கையில்
கரைத்தே கடன் தீர்ப் பார் !

அசுத்தம் என்றே அனைவரும் கருதும்
அச்சுமை தானேற் கும்
பொறுமை மிகுந்த புண்ணிய மாது
புவியென வாழிய வே !

வற்றா நதியாய் வாழும் நதியாய்
வந்தே உயிர்காக் கும்
பெற்றா யெனவே பேணியே நாமும்
போற்றித் துதிப்போமே !

காளியன்னை தான் தன் கருணையை
கங்கை வெள்ள மதில்
கலந்திடச் செய்தே கலிதீர்த்தா ளென
வணங்கிப் போற்று துமே !

--பாலாஜி--

No comments: