Face Book LIKE

Saturday, April 25, 2020

கற்பகத் தருவின் கருணை நிழல்




கற்பகத் தருவின்கருணை நிழலில் 
காலம் எல்லாம் தவம் இருப்பேன் 
கருணைக் கடல்தன் இமைசற்று திறந்தால் 
கவலைகள் ஏதும் இல்லை
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

கவலைகள் அண்டிடும் காலத்தில் மாத்திரம் 
காலடி நாதனை நினைத்திடும் மனமே 
கண்களை மூடி என்றும் திருவடி 
சரணென்று கிடந்திட முயல்வாயே 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

அத்வைத நாதனின் அருள் கிடைத் திடுமோ 
ஆழ்மனம் தேடிடும் பொருள் கிடைத்திடுமோ 
அருநவ நிதியைத் தேடிடும் மனமே 
அனுதினம் அவன் துதி பாடிடுவாயே 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

கி.பாலாஜி
16.02.2020
காலை 11 மணி

Monday, April 13, 2020

பார்வை

நடக்கும் திசையை மாற்றினால்
நிழலின் இருப்பும் மாறும்
எண்ணம் சற்றே மாறினால்
ஏற்புடைத் தாகும் அனைத்தும்!

உண்ணும் உணவின் சுவையை
மட்டும் உணரும் நாவு
உணவின் பின்னுள உழைப்பை 
உணர்ந்தால் மறையும் நோவு !

கண்கள் பார்க்கும் கோணம் ஒன்றால் 
காரியம் காட்டும் மாயம்
காரியச் சிறப்பு கூடும், அதனில்
கலந்தால் மனித நேயம் !

எண்ணம் ஏற்றம் கொண்டா லன்றோ
செயலும் ஏற்றம் கொள்ளும்
செயலில் மாற்றம் வேண்டும் என்றால்
எண்ணம் மாறிட வேண்டும் !

-- கி . பாலாஜி
13.04.2020
இரவு 7 மணி

Sunday, April 5, 2020

எங்கும் ஒளிமயம்





ஏற்றுக விளக்கு
எங்கும் ஒளி மயம் 
போற்றுக பாரதம் 
தோன்றுக பேரொளி 
மாற்றல ரெல்லாம் 
சென்று ஒளியுக
ஆற்றிடும் சேவைக் 
கரங்கள் மிளிருக 

நன்மையைக் கருதி 
நானில முழுதும் 
நலமே சூழ்கென 
ஏற்றும் விளக்கு 
புன்மை அனைத்தும் 
போவெனப் போக 
புண்ணிய ரெல்லாம் 
ஏற்றும் விளக்கு!

உலகம் முழுதும் 
ஒன்றே ஜோதி 
உள்ளம் அதனில் 
விளங்கும் ஜோதி 
ஊரும் நாடும் 
நோய்நொடி இன்றி 
உயர்ந்த மனதுடன் 
ஏற்றும் ஜோதி !

நலமே சூழ்கென 
நினையா மனத்தின் 
நிலையாத் தன்மைய 
தீமைக ளெல்லாம் 
ஒற்றை விளக்கின் 
ஒருதிரிச் சுடரில்
விட்டில் போலே 
வீழ்ந்து மாய்க !

உள்ளத் தொளியில் 
உவந்து சொல்லும் 
ஒவ்வொரு சொல்லிலும் 
உண்மை  ஒளிருக
உலகம் எங்கிலும் 
வெண்மை பரவுக 
வேற்றுமை மறையுக
 ஒற்றுமை மலர்க !

      ஏற்றுக விளக்கு 
      எங்கும் ஒளி மயம் 
      போற்றுக பாரதம் 
      தோன்றுக பேரொளி !

-- கி.பாலாஜி
05.045.2020
இரவு 7 மணி

Saturday, April 4, 2020

ராமாயண நாயகர்

ராமாயண நாயகர்



ராமாயண நாயகர்
இருவர் பிறப்பு
ஒன்றி வருமோர்
இரண்டுநட்சத் திரங்களில்.
புனர்பூசம் பூசம்
ராமர் பரதன் ;
இலக்குவ னுடனே
இன்னொரு தம்பி
அருநட் சத்திரமாம்
ஆயில்யத்தில்;
திதியோ
ராமனுக்கு நவமி
மற்றவர்க்கு தசமி!

தந்தை தந்த சொல்காத்த ராமன்!
தாய்சொன்ன சொற்படி இலக்குவன்!
தமையனின் அறவுரைப் படியாங்கு பரதன்
அண்ணலார் திருவடி நடத்திய அரசு!
நாடாள் பரதன் தாள்பணிந் தாங்கே
தம்பிசத் ருக்னன் நடந்திட்ட பாங்கு !

அறமே உருவாய் அன்பாம் ராமன்!
அவனின் நிழலாய் இலக்குவ சேவை!
அறத்தின் ஒளியாய் பரதனின் நீதி!
அவனின் நிழலாய் சத்ருக்னன் பாதை!

பொறுமையில் சிறந்த சீரிய பரதனாய்
சேவையில் சிறந்த இலக்குவ மனமாய்
கருத்தாய் கவனமாய் சத்ருக்னனாய்
அனைவரும் போற்றும் அறமே ராமனாய்

வாழ்ந்திட உறுதி கொள்வாய் மனமே
வளமும் நலமும் சேரும் தினமே
அன்னை சீதை அருள்பா லிப்பாள்
அனுமன் துணையும் என்றும் நிலவும் !

கி.பாலாஜி
04.04.2020




Friday, April 3, 2020

உன்னை...உனக்காக.....


உன்னை...உனக்காக...


கண்வழி புகுந்து 
உள் வரை செல்லும் 
உன்னத உணர்வே 
காதல் !

காலம் என்னும் 
கட்டுப் பாட்டின் 
தடைகளை வென்றது 
காதல் !

உருவம் என்னும் 
தோற்றத் தழகில் 
உயிர்ப்பது மில்லை 
காதல் !

உணர்வால் பிறந்து 
உணர்வில் கலந்து 
உள்ளில் மடிவது 
காதல் !

ஊரும் பெயரும் 
நாடும் வீடும் 
வேண்டுவ தில்லை 
காதல் !

உயரிய பண்பின்
வயப்பட் டென்றும் 
உதிப்பது மில்லை 
காதல் !

பெயர்களில் அடங்காப் 
பேதைப் பொருளாய் 
உணர்வில் உதிப்பது 
காதல் !

உன்னை நீயாய் 
உணர்ந்து லயித்து 
உன்னில் கலப்பது 
காதல் !

உந்தன் பெயரோ 
புகழோ பணமோ 
வேண்டுவ தில்லை 
காதல் !

உன்னை என்றும் 
உனக்கென மட்டும் 
உணரும் உயிரே 
காதல் !

--கி.பாலாஜி
02.04.2020
காலை 6.15

Thursday, April 2, 2020

இயற்கை மதித்தல்





இயற்கை மதித்தல் !

கொற்றவை அருள் இருக்கக்
      கொடுநோய்கள் விலகாதோ
பெற்றவள் மக்களையே
      பேணிக் காத்திடுவாள்.
சுற்றமும் நட்புமெல்லாம் 
      பெற்றதாய் மட்டுமன்றோ !
சுகமீந்து காத்திடுவாள்
      செம்மலர்ப் பதம் பணிவோம்!

பதினெட்டு கைகளுண்டு 
      பக்தர்களைக் காப்பதற்கே 
பாரினில் துன்பங்களைப் 
      போக்கிடும் தேவியவள் 
ஆடம் பரமேதும் 
      காட்டாமல் நாமென்றும் 
அன்போடு பதம் பணிவோம் 
      ஆறுதல் அவள் தருவாள் !

பக்தி ஒன்று மட்டும்
      பாமரர்க்குப் போதாது
பாரின் விதிகளை நாம்
      மீறாமல் பணி செய்வோம்
செய்யும் பணிகளிலே
      பலனேதும் பாராமல் 
செய்தால் சுகமளிப்பாள்
      தேவி அருள்புரிவாள்!

அன்பைப் புறக்கணித்தோம் 
      அனைவரும் சமமென்னும்
உண்மையை நாம் மறந்தோம் 
      ஊழ்வினை தொடர்ந்ததுவே
இயற்கை ஈந்திருந்த 
      இனிய வரங்களெலாம் 
பேணிப் போற்றாமல் 
      பேரழிவை நாம் கண்டோம்!

இயற்கை தன்னோடு 
      இயைந்த வாழ்வதனை
இனியேனும் போற்றிப்
      பெருவாழ்வு பெற்றிடுவோம்!
நீராற்றல் தனை மதிப்போம் 
      நீர்நிலைகள் காத்திடுவோம்  
பேராற்றல் தனைப்பெறுவோம் 
      பெருமைகளை நாமடைவோம் !

கி.பாலாஜி
03.04.2020
காலை 9.30



ராம ராம என்ற சொல்லை
      ராகம்   :     தேஷ்

ராம ராம என்ற சொல்லை
ராவும் பகலும் சொல்லி வந்தால்
தேகநோயும் தீருமே
தீரும் பிறவி நோயுமே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

அஞ்சும் வினைகள் அனைத்தும் நம்மை
அகன்று எங்கோ ஓடுமே
ஆறும் அனைத்து மனதின் ரணமும்
அன்பு நெஞ்சில் பெருகு மே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

சிந்தை முழுதும் நிறையும் ராமம்
விந்தை பலவும் புரியும் ராமம்
என்றும் நம்மைக்கூட நின்றே
காக்கும் ராம நாமம் ஒன்றே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

ராமர் வீரம் தன்னைக் கூட
ராம நாமம் தோற்க வைக்கும்
அனுமன் நெஞ்சில் நிறையும் அந்த
ராம நாமம் வெல்லு மே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

--கி.பாலாஜி
02.04.2020
காலை 7.45
ராமநவமி தினம்

Wednesday, April 1, 2020

புன்னகை புரிந்தால் போதும்


புன்னகை புரிந்தால் போதும்



எனக்குப் பேசத் தெரியாது - என் 
ரசனையில் குறைவே இருக்காது!

சிறுவர் குழாத்தின் 
இடையே  நானொரு 
சிறுவன் !
இளைஞர் குழுவின் 
இடையில் நான் ஒரு 
இளைஞன் !
முதியோர் கூட்டம்
தனிலே  நானொரு 
முதியோன் !
அனுபவம் ஒன்றே 
அங்கே பேசும் !
அனைத்தும் மலராய்
மணம் வீசும் !
   எனக்குப்பேசத் தெரியாது என் 
    ரசனையில் குறைவே இருக்காது

இலக்கிய வாதிகள் 
இடையில் நானொரு 
இலக்கிய ரசனை 
மிக்கதோர் பிறவி !
இசைக் கலைஞர் 
மத்தியில் நானொரு 
இசையை ரசிக்கும் 
இசைஞன் !
பேசத் தெரிய 
வேண்டிய தேவை 
என்றும் எனக்கு
இருந்த தில்லை !
பேசா திருக்கும்
புலமையைப் பிறரும் 
மதிக்கத் தெரிந்து 
மகிழ்வார் !
      எனக்குப் பேசத் தெரியாது - என்
      ரசனையில்  குறைவே இருக்காது

அனைத்து விஷயமும் 
பற்றிய அறிவு 
ஒன்றும் எனக்குக் 
கிடையாது !
ஆனால் அவற்றின் 
ஒவ்வொரு துளியையும் 
அலசி ரசித்து 
மகிழ்வேன் - அதிலே 
உயிர்த்து வாழ்வேன் !
       எனக்குப் பேசத் தெரியாது - என்
       ரசனையில்  குறைவே இருக்காது!

மனமொரு மித்து 
இருந்து விட்டால் 
மற்றெதும் தேவை 
இருக்காது !
மனதில் காணும் 
இன்பம் அதனைச்
சொல்ல மொழியே 
கிடையாது ! 
மனமொழி மற்றும் 
உடல்மொழி யதனின்
உண்மை ஒன்றே 
போதும் !
உலகில் காணும்
கலைஞர் எவர்க்கும்
அதுவே ஊக்கம்
ஆகும்!
         எனக்குப் பேசத் தெரியாது - என்
         ரசனையில்  குறைவே இருக்காது

நம்மைச் சுற்றி 
என்றும் நிற்கும் 
நால்வகைச் சுவையின் 
சிறப்பை 
நாமும் புரிந்து 
கொண்டு ரசித்துப்
புன்னகை புரிந்தால்
போதும்!
என்றும் இளமை 
மனதில் நிற்கும்
எங்கும் மகிழ்ச்சி
பூக்கும் !
எங்கும் உவகை 
ஊற்றுப் பெருகி
உலகம் நிமிர்ந்து
நிற்கும் !
         எனக்குப் பேசத் தெரியாது - என்
         ரசனையில்  குறைவே இருக்காது !

-- கி.பாலாஜி
29.03.2020
பகல் 2.30