Face Book LIKE

Friday, July 24, 2020

அம்பிகை நேரில் ஆடி வந்தாள்

அம்பிகை நேரில் ஆடி வந்தாள் 
ஆடி வெள்ளியில் அருள வந்தாள் 
திருவருள் புரிந்திட மனம் கனிந்தாள் 
தினந்தினம் பூஜையில் கொலு வமர்ந்தாள்
(அம்பிகை)

ஆறுதல் தருமோர் ஆனந்தபைரவி 
அன்பினைப் பொழியும் அம்ருத வர்ஷிணி 
இகபர சுகம்தரும் ஈசமனோஹரி
ஈந்திடும் கருணைக் கடல் கல்யாணி  (அம்பிகை)

ரம்மியம் மனதினில் சேர்த்திடும் ரஞ்சனி
ராக மாலையாய் அமர்ந்தருள் லலிதை
கொஞ்சிடும் மழலை கோகிலத்வனியாள்
அஞ்சுதல் அகற்றிட ஆபோகி வருவாள் (அம்பிகை)

வாழ்வினில் வசந்தங்கள் சேர்த்திடும் வசந்தா 
வந்தனை புரிந்தேன் நிதமவள் பதம் தான்
வசந்த பைரவி பொழிந்தாள் அருள்தான்
விஜயநாகரி திருத்தாள் துணைதான் (அம்பிகை)

கி.பாலாஜி
24.07.2020
பகல் 2 மணி

Thursday, July 23, 2020

திருவருள்தான் பிறந்ததுவோ ராமா


திருவருள்தான் பிறந்ததுவே ராமா 
திருவாய்தான் மொழிந்ததுவே ராமா 
திருவீய்ந்து நின்றதுவே ராமா
தீபத்தின் சுடரெனவே ராமா

பார்புகழும் நின்நாமம் ராமா
பன்முறைநீ சொலவைத்தாய் ராமா
பல்லாண்டு பாடுகிறேன் ராமா
வில்லாண்ட தோள்வலியோய் ராமா

வில்லெடுத்த வீரமதை ராமா
சொல்லெடுத்துப் பாடவைத்த ராமா
கல்லுக்கு உயிர் தந்த ராமா
காசினியைக் காக்கின்ற ராமா

மனமார்ந்த பக்திக்கே ராமா
கதிமோட்சம் தனையீந்த ராமா
மானவனா யவதரித்த ராமா
மனமதிலே ஒளிவீசும் ராமா

நிதிதானோ சுகமீயும் ராமா நின்
ஸந்நிதியே சுகமீயும் ராமா
நினைவொன்றே நிதியன்றோ ராமா
நின் ளருளொன்றே கதியன்றோ ராமா

கி.பாலாஜி
08.05.2020
பகல் 2.30

Wednesday, July 22, 2020

அரவண துயிலும் அரங்கநாதா

Translation of Slokam SHANTAKARAM BHUJAGASAYANAM
in Tamil by KB and sung by LB

அமைதியின் உருவாய் அரவினில் துயில்வோய்  
ஆலிலை வயிற்றில் அரவிந்தம் உடையோய் 
அமரர்கள் அனைவரும் தொழுமோர் அரசே 
அனைத்துலகிற்கும் ஆதாரம் நீ !

ஆகா யத்தையும் கடந்த நற்பொருளே 
அழகிய கொண்டல்  நிறமுடை யோனே 
நலமே நிறைந்த திருவடி வானோய் 
திருமகள் திருமனம் ஆளும் வடிவோய்

தாமரைக் கண்ணா தவமுனிவோரின் 
சிந்தையில் அமர்ந்த சீரிய திருவே 
பாற்கடல் அமரும் பரமா வணக்கம் 
அச்சங்க ளகற்றும் அச்சுத சரணம்

அகிலத்தை ஆளும் அரசே சரணம் 
அண்டங்க ளெங்கும் நிறைவோய் சரணம் 
திருமகள் மனம் உறை தேவே சரணம் 
திருவேங் கடவா சரணம் சரணம்

திருமலை உறையும் திருவே சரணம் 
திருமால் திருவடி சரணம் சரணம் 
திருமறை போற்றும் திருத்தாள் சரணம் 
திருவடி தொழும்பே றளிப்பாய் சரணம்

--- கி. பாலாஜி
     27.05.2020
     காலை 8.45

'அச்சங்களகற்றும்' என்பது வரை வடமொழியில் உள்ள 
'சாந்தாகாரம்' என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு.

உயிருள்ள சருகுகள்


உணர்வுகள் காய்ந்தாலும் 
உதிர்ந்தேதான் வீழ்ந்தாலும் 
சருகாய் சரிந்தாலும் 
சரித்திரம் மறைவதில்லை! 

எண்ணத்தின் மூலையிலே 
எங்கோ ஓர் அறையினிலே
பனியிதழின் ஈரம் மட்டும் 
சிலிர்த்துச் சிரிக்க வைக்கும்

பார்வைகள் மட்டும் தான் 
பழுதடைந்து போனாலும்
பார்வைக்குப் பின்னிலையில் 
பசுஞ்சோலைக் குளிர் உண்டு 

வேனலில் மழை எனவே 
பாலையிலே பனி எனவே 
வெண்பளிங்கு மனமுண்டு 
வெதுவெதுப்பாய் நினைவுண்டு

நீறாய் பூத்திருந்த 
நிலையினிலும் அதனுள்ளே 
நெருப்பின் சூடுண்டு 
நினைவின் மனமுண்டு!

உதிர்ந்த சருகினிலும் 
உயிருண்டு உணர்வுண்டு 
ஒரு சில மனங்களதை 
உயிர்ப்பிக்கும் குணமுண்டு!

--- கி.பாலாஜி
26.06.2020
இரவு 11.30

விலகிப் போ 'கொரோனா'

விலகிப் போ கொரோனா !

அன்றாடங் காச்சிகளுக்கு
ஏதப்பா ஊரடங்கு ?
  அன்றாடங் காச்சிகளுக்கு
  ஏதப்பா ஊரடங்கு ?

'விரும்பிப் போனால் 
விலகிப் போகும்'
என்பார் சொல்லிக் 
கேட்டதுண்டு!
நாம் விலகி விலகி 
நிற்கிறோம்; அதுவோ
விரும்பி விரும்பியே 
வருகிறதே ;
கழுவிக் கழுவி 
விடுகிறோம் ;
கையில் ஒட்டித் 
தொலைக்கிறதே!
தொடாமலே 
சிணுங்குகிறோம்,
படாமலே நகர்கிறோம் ;
ஆனால் அதுவோ 
தொடாமல் கூடப்
படருகிறதே !

விலகி இருந்தே 
பழகுவதும்,
வீட்டுக்குள்ளே
முடங்குவதும்.....
  விலகி இருந்தே 
  பழகுவதும்,
  வீட்டுக்குள்ளே
  முடங்குவதும்.....
இன்னும் எத்தனை 
காலம் நடக்கும் 
இந்தக் 
கண்ணாமூச்சி ஆட்டம்? 

அன்றாடங் காச்சிகளுக்கு
ஏதப்பா ஊரடங்கு ?
'கஞ்சி வருதப்பா' என்று 
பாடி விட்டால் 
வந்து விழுமா கஞ்சி?
இவர்களுக் காக வேனும் 
'கண்ணத் தொறக்கணும் சாமி 
இது வானம் பாக்குற பூமி'...

--கி.பாலாஜி
11.07.2020
இரவு 10 மணி

அழிந்துபட்ட அடையாளங்கள்

அழிந்துபட்ட அடையாளங்கள்
மனதிலும் கூடக் 
குரல் 
கேட்காத தொலைவில் 
மறைந்து விட்டேனோ 
நான் ?
அடையாளங்களே 
அழிந்துவிட் டனவோ? 
அத்தனை காலங்கள் 
கடந்துவிட் டனவோ?

நெருங்க வியலாத் 
தொலைவில் இருப்பினும்
நெருங்கியே 
நாம் வாழ்ந்த காலங்கள்
மனதில் !
அண்மையைப் பரப்பும்
அழகிய கணங்கள் !

கனவுகள் காணும் 
தெம்புள்ள வரை, 
மனதில் 
மொட்டுகள் என்றும்
விரிந்த வண்ணமே! 
அன்பெனும் மணமும் 
பரவிய வண்ணமே !

--கி.பாலாஜி
18.07.2020

Gist of the 
Above, in English:

Looks like my voice doesn't even 
linger in your mind ! 
Have I gone that far from you? 
Has my identity got erased? 
Have that many number of 
years passed off?

We were living so far , but 
Feeling so very near, once!
Proximity was prominent then !

So long as the mind is 
capable of dreaming,
The buds of Memories
keep blossoming !
The Aroma of Love
Keep spreading all over!

ராம நாமமெனும்...

ராமநாம மெனும் வேதமே
ராக தீபம் ஒளிர் கீதமே
ஆடும் மனதைநிலை 
நிறுத்தியென்றுமொரு 
ஆனந்தம் தரும் 
நாமமே.      (ராம)

அன்பு என்ற ஒரு 
பதத்தில் நிலைத்து மனம் 
அலைந்தி டாதுவைக்கும் 
மாயமே   
மாய மோகங்களை 
மனதைவிட்டு என்றும்
நீங்கச் செய்துவிடும் 
ராமமே.         (ராம)

தோன்றும் நினைவுளைத் 
தொடர்ந்து சென்றுவழி 
மறித்து நின்றுநெறிப் 
படுத்துமே !
நெஞ்சில் அமைதியெனும் 
நெறியை ஏற்படுத்தும்
நீதியாய்  திகழும் 
நாமமே       ‌(ராம)

ராம நாமமேஸ்ரீ 
ராம னுக்கெதிர்
நின்றுவெல்லு மோருபாயமே
என்று காண்பித்த 
பக்தியின்திரு
உருவமா மெம் அனுமனே
அவனை அன்புடன்
வணங்கும் பக்தருக்கு 
என்றும் அருள்புரியும் 
ராமமே       
அஞ்சும் தேவையொன்றும்
இல்லை யென்று தினம்
உறுதி அளிக்குமோர் அனுமமே             
(ராம)

--- கி.பாலாஜி
05.07.2020.
பகல் 12.15

அவனே ராமன்

ராகம்: யமுனா கல்யாணி

அவனே ராமன் அவனே ராமன் 
அவனே..... ஸ்ரீராமன் 
ரகு குலம் தழைத்திடத் தோன்றிய மணியாம் 
ரமணீய ரூபன் ரகுராமன்            (அவனே)

அன்பின் உருவம் பண்பின் சிகரம் 
பணிவின் பெருமை பரப்பிய புனிதம்
ராம ராஜ்யம் என்பதை நமக்கு 
எடுத்துக் காட்டாய் நிறுவிய சரிதம் (அவனே)

ஆயிரக்கணக்கில் பெருமைகள் சேரும் 
அவனோ அடக் கத்தின் திருவுருவம் 
அவனுக்கு உயிர்களில் பேதங்கள் இல்லை 
அன்பின் இனமே அவன் இனமாகும்   (அவனே)

மனதைக் கொட்டிக் கவிழ்ப்போம் அவனின்  
மலரிணை தனிலே இன்னொரு மலராய் 
மாதவம் செய்தவர் ஆவார் அவனை 
மனதால் நினைத்திடும் உயிரின மெல்லாம்
(அவனே)

கி.பாலாஜி
22.07.2020
காலை 10 மணி

Sunday, July 5, 2020

கனவில் மலர்ந்த கார்த்திகை நிலவு



பூவின் மணமும் தேனின் சுவையும்
புலரிக் கதிரில் ஒளிரும் ஒளியும்
பனியின் மென்மைத்தன்மை அதுவும்
பாலின் வெண்மை வெகுளிக் குணமும் 
ஆனைப் பிடியின் நடையின் அழகும்
மானின் கண்ணாய் மருளும் விழியும் 
பொன்னின் நிறமும் புவியின் திறமும்
போதவிழ் மலரின் பொன்றா அழகும்
ஒன்றாய்க் கொண்டே ஓர் உருவாகிக் 
கன்னிப்பெண்ணாய் கண் முன் நின்ற
கவினூ றிதழே காவியச் சுவையே,
கனவில் மலர்ந்த கார்த்திகை நிலவே
கனலும் கவிதை வரிகளின் எழிலே

கனியே கனியில் ஊரும் ரசமே
கலையே கலையின் பொருளே அருளே 
கண்ணதாசனின் கவிதைச் சுவையே
இன்னும் எழுதாக் கவியே இசையே
இனிக்கும் சுவையை ஈனும் அழகே
இறையின் அருளால் என்னிடம் வந்த
இயல்பே, இணையே இல்லாப் பொருளே,
ஈவாய் எனவே கேளா வரமாய்
என்னைச் சேர்ந்த இன்னிசை உயிரே!
இன்றும் என்றும் இதுபோல் பொன்றா
இதயத் தழகுடன் இணைவாய் வாழ்க !


-- கி. பாலாஜி
01.07.2020
காலை 11.30

Wednesday, July 1, 2020

உழைக்கும் வர்க்கம்


காற்றழுத்த மண்டலமே 
காலியாகி விடும் போலக் 
காலால் அழுத்தி அழுத்திக் 
காற்றனைத்தும் டயருக்குள் 
கொண்டுவந்து நிறுத்தி  
ஓடாய் உழைத்தென்றோ 
உருமாறிப் போனேன் நான்! 
கொரோனா வந்தாலும் எந்தக் கொடுநோய்தான் வந்தாலும்,
உழைக்கும் வர்க்கத்துக்கு 
உழைத்தால் மட்டும்தான்
உண்பது நாழியும் உடுக்கநான்கு முழத்துணியும் !

--கி.பாலாஜி
14.06.2020

நெஞ்சில் நெருடும் முள்




நெஞ்சில் நெருடும் முள்

மாலையிடவும் முடியவில்லை 
மறந்திடவும் முடியவில்லை 
மனதில் சுமக்கின்ற 
பாரத்தை இறக்கி வைக்கச் 
சுமைதாங்கிக் கல்லேதும்
சுற்றுப்புறத்தில்லை !

கண்களால் பல கதைகள் 
நானும் சொன்னதுண்டு;
வெறும் கதை எனக்கேட்டு 
நீ வேறிடம் சென்றதுண்டு!

உள்ளில் அலையடிக்கும் 
ஓங்காரப் பேரிரைச்சல் 
உன் செவிக்குக் கேட்கப்
போவதில்லை பூமகளே!

எத்தனைதான் மனதுக்குக் 
காரணங்கள் புரிந்தாலும் 
காதல் பிறப்பதற்குக் 
காரணமே இல்லையடி !

---கி.பாலாஜி
25.06.2020

மலரே மாதுளை மலரே


You can hear this song in the following YouTube link. The song is rendered beautifully by SMT.Lakshmi Balaji.

https://youtu.be/lS2vH7TLsTE

ஸக மகஸக மகஸக மக ரிஸநி
பரி மரிபரி மரிரிரி பமகரிஸ

மலரே மாதுளை மலரே...

மலரே 
மாதுளை மலரே 
மலரம் போடு 
மதன் வரும் நேரம்
மாலைக ளொடு நீ 
வரவேற்கும் நேரம்
மகிழ்ச்சிக் கடலில் 
திளைத்திடும் நேரம்          (மலரே)

ஆயிரம் விளக்குகள் 
கொண்டதோர் வானம் 
ஆசைக ளோடே 
விரிந்ததுபோலே
அந்தியின் மலராய் 
ஆயிரம் கனவுடன் 
அருமைத் தோழிநீ 
இமை திறந்தாய்.       (மலரே)

பல வண்ணத் தாரகை 
மத்தியிலே 
பாவை நீயும் 
சிரித்திருந் தாய் 
பங்கயக் கண்ணன் 
நண்ணிட நீயும்
நாணத்தி னாலே  
தலை குனிந்தாய்.   (மலரே)


கி.பாலாஜி
26.06.2020
மாலை 5 மணி