உருத்திரன் தோத்திரம்
Just the Cover Page Picture of this Book by Sri C Sundararamamurthi, my cousin, was the inspiration to write these lines. I won't say that I wrote it. It was nothing but the Grace of Lord Shiva, the lines just flew from my heart. My gratitude to God and my cousin for inspiring me.
உருத்திரன் மலரடி தொழுகின்றேன்
உலகின் மலர்த்தாள் தொழுகின்றேன்
உண்மையின் பொருளைத் தொழுகின்றேன்
ஓங்காரத்தைத் தொழுகின்றேன்
ஒன்றே உருவாம் உருத்திரனே உன்
முன்னும் பின்னும் தொழுகின்றேன்
உயிரினம் அனைத்தின் உருவாக
உயிராய் திகழ்வாய் தொழுகின்றேன்
பண்பே பதமே தொழுகின்றேன்
பழமே சுவையே தொழுகின்றேன்
நிலவின் குளிராய் நினைவில் நிற்கும்
நித்தியப் பொருளே தொழுகின்றேன்
பொருளே பொருளின் சுவையாய் நின்ற
பேருரு வேயுனைத் தொழுகின்றேன்
அறிவே அறிவின் செயலும் ஆனாய்
ஆறா அமுதே தொழுகின்றேன்
சொல்லே சொல்லின் பொருளும் ஆனாய்
சோதிப் பிழம்பே தொழுகின்றேன்
சொல்லாய் உதித்து சொல்லின் உருவாய்
நின்றாய் சிவமே தொழுகின்றேன்
ஒலியே ஒலியின் உருவே ஆன
ஓசை நயமே தொழுகின்றேன்
நாதம் என்னும் வேதத்தணுவே
நயமே நலமே தொழுகின்றேன்
உணவே உண்ணும் உணவின் சுவையே
உயிராம் அமுதே தொழுகின்றேன்
ஊற்றின் நீராய் உவகைப் பெருக்காய்
உலகைக் காப்பாய் தொழுகின்றேன்
உன்னருள் ஒன்றே உன்னதம் என்றே
உணரச் செய்தாய் தொழுகின்றேன்
உன்பதம் ஒன்றே உள்ளம் எங்கும்
நிறைந்திடச் செய்தாய் தொழுகின்றேன்
அம்மையப்பா தொழுகின்றேன்
அன்பின் உருவே தொழுகின்றேன்
ஆசைகள் அழிக்கும் காரணப் பொருளே
ஆதி சிவமே தொழுகின்றேன்
அருளே அருளின் பொருளும் ஆனாய்
ஆலம் உண்டோய் தொழுகின்றேன்
ஆதர வுந்தன் திருநாமம் தான்
திருவே பரமே தொழுகின்றேன்
தொழுகின்றேன் திருவெளியாடல்
தொழுகின்றேன் திருவிளையாடல்
தொழுகின்றேனுன் அடியார்க் கெல்லாம்
அடியா ரவரின் அருட்பாடல் (உருத்திரன்)
-- கி.பாலாஜி
24.06.2020
காலை 11.45