Face Book LIKE

Tuesday, November 26, 2019

அனுமன் பஞ்சகம்


அனுமன் பஞ்சகம்


ஸ்ரீ ராம தூதனின் பாதமே
பணிந்திட நலன்கள் கூடுமே!

இலங்கை நகரின் சிறையினில் இருந்த
சீதையின் துயரங்கள் துடைத்தவன் பதமே துணையென நின்றால் துயரங்கள் இலையே! தூயவன் அனுமன் அருள்தரும் நிஜமே !
பாதுகை பணிந்த பரதனே முதலில்
பரமனின் விஜயத்தைப் பற்றிய சேதி
அறிந்திட வேணும் எனவே விழைந்து அனுமனும் பறந்தான், அவன் பதம் சரணம்  !
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

சீறிடும் கடலின் கரையில் பாதம்
வைத்தே எம்பிப் பறந்தான் அனுமன் !
போரிட வைத்த புல்லரை அழித்தான்,
அன்னை முகத்தினில் புன்னகை கண்டான். ராமா யணமெனும் மாலையின் நடுவே
திகழும் ரத்தின திலகம் எனவே
ராக்கதர் களை அழித்திட்ட வாயு
புத்திரன் புகழழைப்  புகன்றிடு வோமே!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
         பணிந்திட நலன்கள் கூடுமே.

தந்தை வாயுவின் வேகத்திற் கிணையாய் தனயனும் மனதின் வேகத்தில் அமர்ந்தான்! இந்தி ரியங்களை வென்றவோர் தீரன் இன்னருள் ராம நாமத்தின் துணையால் அன்னையின் இருப்பிடம் அறிந்தே பறந்தான்! குவலயம் போற்றும் குரங்கினத் தலைவன் திருவடி நாமும் தினம்நினைப் போமே, சிந்தையில் வைத்தே துதித்திடு வோமே!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

அஞ்சனை மைந்தன் அன்னை ஜானகி
மனதைக் குளிரச் செய்தான் புனிதன் !
அட்சய குமாரன் என்னும் அரக்கனின் செருக்கை அழித்தான் சுந்தர ரூபன் !
குபேர நகரைப் போலத் திகழ்ந்த
இலங்கை நகரைத் தீக்கிரை தந்த
குரங்கின் உருவைக் கனவில்கூடக்
கண்டால் கலங்கும் கோலம் தந்தான்!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

கடுகிச் செல்லும் காற்றின் மகிழ்வாய்
பிறந்த புத்திரன் ஆஞ்ச நேயன்,
பாரிஜாத மரத்தின் அடியில்
பரமனைச் சிந்தையில் வைத்தே துதிப்போன், தங்கத் துகளைக் கொண்டு கட்டிய
மண்டபம் போல ஒளிரும் உருவம்,
தலைவன் ராமன் பெயரைச் சொல்லும்  தலங்களில் எல்லாம், இரு கைகூப்பிக் கண்களில் மகிழ்ச்சிப் பெருக்காய் பொழியும்  கண்ணீ ருடனே அமர்ந்தருள் புரிவோன்! கருணைக் கடலை நாமும் துதிப்போம்! காத்தருள் புரிந்தே கூடநின் றிடுவான் ! கண்களைமூடி நாமும்கை கூப்பிக் கணம்கணந்தோறும் திருப்பதம் தொழுவோம்! காகுத்தன் தூதன், எளியவர் நேசன்
என்றும்நம் முடனே  துணைநின் றருள்வான்!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

கி.பாலாஜி
06.11.2019

இதுவரை எழுதாத கவிதை...


இதுவரை ......

இதுவரை எழுதாத கவிதையின் உருவமாய் 
என்முன்னில் நீ வந்து நின்றாய்
இதுவரை சொல்லாத கதையொன்றின் உருவமாய்
என்னோடு நீ கலந் திருந்தாய்

இதுவரை மலராத மலரொன்றின்  மணமாய் 
நாசியின் அருகிலே நின்றாய்
இதுவரை அறியாத உணர் வொன்றின் பொருளாய் 
மனதோடு கரைந்து சென்றாய்

இதுவரை காணாத நதியின் அலைகளாய் 
கால்களை வருடி நீ சென்றாய்
இதுவரை காணாத நிலவின் கதிராய் 
நெஞ்சத்தில் மின்னொளி ஆனாய்

இதுவரை தோன்றாத நினைவொன்றின் நிழலாய்
நீண்டு என் அருகினில் நின்றாய்
இதுவரை பாடாத ராகத்தின் ஸ்வரமாய் 
நேரினில் தேரேறி வந்தாய்

உருவெளித் தோற்றமோ உயிர் கொண்டு வந்ததோ 
ஒன்றும்நான் அறியா திருந்தேன் 
உன்னதக் கனவொன்றின் நனவாக நீ  வந்து
கரம்தொட்டுக் கரைகாட்டி நின்றாய்


கி. பாலாஜி
18.11.2019

Sunday, November 24, 2019

உன்னை நீயே உணர்ந்து கொள்



உன்னை நீயே உணர்ந்து கொள்
உந்தன் திறனைப் புரிந்து கொள்
உன்னை நீயே விரும்பா விட்டால்
ஊரார் விரும்பி என்ன பயன்?

உன்னுள் சில பல முரண்கள் உண்டு
உனக்கு அவையே அரண் ஆகும்
உனக்கு வலிமை சேர்க்கும் நல்ல
தூண்கள் அவையே தான் ஆகும்

உன்னுள் நாத அலையாய் ஓடும்
ஏதோ ஒன்று அழைக்கிறது
உந்தன் திறமை என்ன என்று
அதுவே காட்டித் தருகிறது

வீழும் கதிரைப் பற்றிக்கொள்
விளக்கொளி ஒன்று உருவாகும்
விரிந்த இருட்டை விலக்கி கொள்
விதியை மதியால் மாற்றிக்கொள்

உன்னை நீயே உணர்ந்து கொள்வாய்
உலகம் பயனுறச் செயல் புரிவாய்
உதறித் தள்ளிய உலகே உன்னை
உயிராய் எண்ணிக் கொண்டாடும்
உன்னை நீயே உணர்ந்து கொள்
உந்தன் திறனைப் புரிந்து கொள் !


--கி.பாலாஜி
02.08.2019
இரவு 10.30

கண்ணயர்ந்துறங்கையில்...


"அன்வேஷிச்சு கண்டெத்தியில்லா"என்ற மலையாளத் திரைப்படத்தில் வரும் "  இன்னெலெ மயங்ஙும் போள்" என்ற பாடலின் மொழிபெயர்ப்பு; அதே மெட்டில் பாடக்கூடியது.

பாடல்:
கண்ணயர்ந் துறங்கையில்
கனவொன்றின் காலடிப்
பொற் சிலம்பொலிநான்
கேட்டெழுந்தேன்                        .             (கண்)

மார்கழி மாதத்தில்
முதன்முதல் மலர்கின்ற
மாதுளைப் பூவின்
மணம் போலே
நினைக்காத நேரத்தில்
நெகிழ்ந்தொரு  தருணத்தில்
நித்திலமே நீ என்
அருகில் வந்தாய்    .                                 (கண்)

பௌர்ணமி நிலவொளிப்
பாற்கடல் நீந்தி வரும்
விண்ணதன் வெண்மேகக்
கொடிபோலே
பொன்னொளிர்க்
கனவொன்றின்
ஏதோ நினைவிழைத்
தும்புரு மீட்டி
நீ வந்தாய்.                                                   (கண்)             

வானத்தில் இருளில்
வழி மாறி வந்து நின்ற
வசந்தத்து நிலவதனின்
கதிர் போலே
முகத்திரை தானணிந்த 
மௌனத்தின் லயம்போலே
முன்வந் தழைக்காமல்
நீ வந்தாய்                                                    (கண்)


---கி.பாலாஜி
29.07.2019

பூமிக்கு வந்த பூரண சந்திரன்


பூமிக்கு வந்த ஓர் பூரண சந்திரன்
புன்னகை புரிகின்ற தோ
பூக்களில் ஆடும் பொன்மழைத் துளியாய் பேரெழில் படைக்கின்ற தோ

கார்முகில் ஓடும் கண்களின் ஓரம்
கவிதைகள் பிறக்கின்ற தோ
தேரொன் றெழுந்து தோரணம் அசையத் தெருவினில் வருகின்ற தோ

மயக்கும் குயிலின் குரலைத் தனது மழலையில் தருகின்ற தோ
மாலை நேரத்துச் சூரியக் கதிராய்
மங்கலம் அளிக்கின்ற தோ

மாமயில் நாடும் மேகத் தெழில்நெடும்
குழலில் மிளிர்கின்ற தோ
மாதின் குணநலம் யாவும்தெய்வ
வடிவில் வளர்கின்ற தோ


கி.பாலாஜி
15.09.1981

எங்கே அந்த சொர்க்கம் ?


எங்கே அந்த சொர்க்கம்?

எங்கே எங்கே எங்கே என்று
தேடித் தேடி அலைகின்றோம்  !

எங்கே அந்தத் தெய்வமணம் சூழ்
தென்றல் காற்று?
எங்கே அந்தத் தேனமுதம் போல்
தெள்ளிய தண்ணீர் ?
என்றும் எங்கள் கிராமத்தின் பால்
ஓடும் வெள்ளி ஓடை எங்கே?
எங்கே அந்தத்
தோட்டமும் துரவும் ?
எங்கே அந்தப் பசுமை வயலும்
வரம்பும் நாற்றும்
பாலை ஈயும் பசுக்கூட் டங்களும்?
தேனிகள் மொய்க்கும்
தேனடை எங்கே ?
அக்கூ அக்கூ வென்றே கூவும்
அந்தப் பறவைக் குரலும் எங்கே?

குயிலும் மயிலும் நிறைந்து காணும்
சோலை எங்கே? சொர்க்கம் எங்கே?
ஊர்வன பறப்பன அனைத்தும் ஒன்றாய்
மனித இனத்தின் துணையாய் நின்றே
ஊர்ந்து சென்ற நாட்கள் எங்கே?

இயற்கை என்பது இயல்பாய் நிறைந்த மனங்கள் எங்கே ?
அழகாய் ஊரின் வெளியே ஓடும்
ஆற்றின் வடிகால் நீரும் எங்கே ?
நின்றால் நடந்தால் நிம்மதி ஒன்றே
கூட நடக்கும் நாட்கள் எங்கே ?
அன்பு என்ற அடிநாதத்தால்
மட்டுமே நடந்த வாழ்க்கை எங்கே ?
வளமும் எங்கே ? வயல்கள் எங்கே ?

தென்னை மரத்தின் கீற்றால் முடைந்த
பாயும் முறமும் கூடையும் குவளைத் தொன்னையும் கூட மனதை விட்டு
அகலா நிற்கும் பசுமை எல்லாம்
எங்கே ? எங்கே ?

காலை எட்டிப் போட்டு நடந்தால்
கம்மாய் கரையும்,
ஏற்றம் இறைத்து நீரைப் பாய்ச்சும்
வாய்க்கால் நுரையும்,
தோப்பின் நிழலை அடையும்போது
தொடரும் மணமும்,
மனதில் இன்றும் நிழலாய் படமாய்
நீங்கா நினைவாய் நின்றே சிரிக்கும் !

எங்கே அந்தப் பழைய முகங்கள் ?
எங்கே அந்தப் பெருமித வரங்கள் ?
வந்தா ரெல்லாம் வாழ வேண்டும்
என்று நினைத்த சீரிய மனங்கள்
எங்கே போயின ? என்ன வாயின ?

வினாக்கள் பலவாய் நிறைந்த போதும் விடைகள் என்றும் ஒன்றே ஒன்று !
பணத்தின் பின்னால் போயின மனங்கள்! 
பாதை மாறிப் போயின சனங்கள்!
சுயநலம் பெருகிப் பொதுநலம் குறுகிப்
புலராப் பொழுதுகள் நீண்டு வளர்ந்தன !
நிம்மதி என்ற சொல்லின் பொருளும் நேரெதிராக மாறிப்போயின !


கி.பாலாஜி
19.07.2019
இரவு 11 மணி

காதல் என்பதற்கழிவில்லை!


காதல் என்பதற் கழிவில்லை அது
வாழா மன மில்லை
கனவும் நினைவும் காதலின் துணையால்
காணும் ஓர் எல்லை                      (காதல்)

இதோ இதோ என்றே சொல்லி
இழுத்துச் சென்றதே -காதல்  (2)
இன்பம் என்றால் என்னவென்று
சொல்லித் தந்ததே
    கனவுக ளெல்லாம் கானல் நீராய்
    மறைந்தே போனதே
    நனவுக ளென்னும் நெடுமூச் சொன்றில்
    கரைந்தே போனதே                   (காதல்)

என்னில் உன்னைக் கரைத்து வைத்தது
காதல் ஒன்றுதான்
என்மனம் தன்னில் நிலையாய் நிற்பதும்
உந்தன் நினைவுதான்
    உறவுகள் என்றும் மறைவ தில்லை
    அந்த உருவம் மறைந்தா லும்
    உணர்வுக ளென்றும் அழிவதில்லை
    அந்த உறவே அழிந்தாலும்        (காதல்)


--கி.பாலாஜி
16.07.2019
பகல் 12 மணி

நினைவுகளே


நினைவுகளே !
பொன் மாலை அணிந்து வாருங்கள்
பூச் சரங்கள் ஆடிட வாருங்கள்
வண்ணப்பூச்சில் எண்ணச் சிறகை
வருடித் தந்திட வாருங்கள்.            (நினைவுகளே)

இமைகள் மூடிட எண்ணத் தோணி
எழுந்து நிமிர்ந்து பாய்ந்திடுதே
கண்ணீர் அருவி ஆனந் தத்தில்
கடலாய் பெருகி ஓடிடுதே
களித் தோடிடுதே.              (நினைவுகளே)

பள்ளிக் காலப் பாடங்கள் இன்று
பாகாய் இனித்து உருகிடுதே
வெள்ளிச் சதங்கை போலொரு நாதம்
வேனல் மழையாய் பொழிகிறதே...
விளையாட்டாய் மனம் களிக்கிறதே
(நினைவுகளே)
கி.பாலாஜி
14.07.2019
இரவு 08.30

சேவற்கொடி நாயகன்


சேவற்கொடி நாயகன்

அடியெடுத்துக் தந்திடுவாய்
அந்த மிகு செந்தமிழில்
அன்பருக்கு அருள்புரியும்
ஆறுமுக வேலவனே !

மூவாத தமிழாலே
முக்காலும் உனைப்பாட
முந்தி வந்து அருள் புரிவாய்
முத்தமிழின் பேரெழிலே !

தீந்தமிழின் சுவையதனைச்
சிந்தையதில் தெளியவைத்தாய்
சித்திரத்தைப் போல் எழுதி
சித்தமதைக் குளிர வைத்தாய்!

சொற்றொடரில் மாலை கட்டி
சோதியுனைப் பாட வைத்தாய்
சொற்களுக்குள் அடங்காத
அற்புதமே ஆறுதலே !

ஆறுபடை வீடு கொண்டாய்
சூரனுக்கும் பேறளித்தாய்
ஆலால சுந்தரனின்
சேயாக வந்தவனே !

மூலமதன் முழுப் பொருளை
ஆலமுண்ட நாயகற்கும்
கோலமுறச் சொல்லிவைத்தாய்
சேவற்கொடி நாயகனே!


கி.பாலாஜி
31.10.2019
பகல் 2.30