Face Book LIKE

Tuesday, November 26, 2019

இதுவரை எழுதாத கவிதை...


இதுவரை ......

இதுவரை எழுதாத கவிதையின் உருவமாய் 
என்முன்னில் நீ வந்து நின்றாய்
இதுவரை சொல்லாத கதையொன்றின் உருவமாய்
என்னோடு நீ கலந் திருந்தாய்

இதுவரை மலராத மலரொன்றின்  மணமாய் 
நாசியின் அருகிலே நின்றாய்
இதுவரை அறியாத உணர் வொன்றின் பொருளாய் 
மனதோடு கரைந்து சென்றாய்

இதுவரை காணாத நதியின் அலைகளாய் 
கால்களை வருடி நீ சென்றாய்
இதுவரை காணாத நிலவின் கதிராய் 
நெஞ்சத்தில் மின்னொளி ஆனாய்

இதுவரை தோன்றாத நினைவொன்றின் நிழலாய்
நீண்டு என் அருகினில் நின்றாய்
இதுவரை பாடாத ராகத்தின் ஸ்வரமாய் 
நேரினில் தேரேறி வந்தாய்

உருவெளித் தோற்றமோ உயிர் கொண்டு வந்ததோ 
ஒன்றும்நான் அறியா திருந்தேன் 
உன்னதக் கனவொன்றின் நனவாக நீ  வந்து
கரம்தொட்டுக் கரைகாட்டி நின்றாய்


கி. பாலாஜி
18.11.2019

No comments: