Face Book LIKE

Sunday, November 24, 2019

உன்னை நீயே உணர்ந்து கொள்



உன்னை நீயே உணர்ந்து கொள்
உந்தன் திறனைப் புரிந்து கொள்
உன்னை நீயே விரும்பா விட்டால்
ஊரார் விரும்பி என்ன பயன்?

உன்னுள் சில பல முரண்கள் உண்டு
உனக்கு அவையே அரண் ஆகும்
உனக்கு வலிமை சேர்க்கும் நல்ல
தூண்கள் அவையே தான் ஆகும்

உன்னுள் நாத அலையாய் ஓடும்
ஏதோ ஒன்று அழைக்கிறது
உந்தன் திறமை என்ன என்று
அதுவே காட்டித் தருகிறது

வீழும் கதிரைப் பற்றிக்கொள்
விளக்கொளி ஒன்று உருவாகும்
விரிந்த இருட்டை விலக்கி கொள்
விதியை மதியால் மாற்றிக்கொள்

உன்னை நீயே உணர்ந்து கொள்வாய்
உலகம் பயனுறச் செயல் புரிவாய்
உதறித் தள்ளிய உலகே உன்னை
உயிராய் எண்ணிக் கொண்டாடும்
உன்னை நீயே உணர்ந்து கொள்
உந்தன் திறனைப் புரிந்து கொள் !


--கி.பாலாஜி
02.08.2019
இரவு 10.30

No comments: