Face Book LIKE

Sunday, November 24, 2019

எங்கே அந்த சொர்க்கம் ?


எங்கே அந்த சொர்க்கம்?

எங்கே எங்கே எங்கே என்று
தேடித் தேடி அலைகின்றோம்  !

எங்கே அந்தத் தெய்வமணம் சூழ்
தென்றல் காற்று?
எங்கே அந்தத் தேனமுதம் போல்
தெள்ளிய தண்ணீர் ?
என்றும் எங்கள் கிராமத்தின் பால்
ஓடும் வெள்ளி ஓடை எங்கே?
எங்கே அந்தத்
தோட்டமும் துரவும் ?
எங்கே அந்தப் பசுமை வயலும்
வரம்பும் நாற்றும்
பாலை ஈயும் பசுக்கூட் டங்களும்?
தேனிகள் மொய்க்கும்
தேனடை எங்கே ?
அக்கூ அக்கூ வென்றே கூவும்
அந்தப் பறவைக் குரலும் எங்கே?

குயிலும் மயிலும் நிறைந்து காணும்
சோலை எங்கே? சொர்க்கம் எங்கே?
ஊர்வன பறப்பன அனைத்தும் ஒன்றாய்
மனித இனத்தின் துணையாய் நின்றே
ஊர்ந்து சென்ற நாட்கள் எங்கே?

இயற்கை என்பது இயல்பாய் நிறைந்த மனங்கள் எங்கே ?
அழகாய் ஊரின் வெளியே ஓடும்
ஆற்றின் வடிகால் நீரும் எங்கே ?
நின்றால் நடந்தால் நிம்மதி ஒன்றே
கூட நடக்கும் நாட்கள் எங்கே ?
அன்பு என்ற அடிநாதத்தால்
மட்டுமே நடந்த வாழ்க்கை எங்கே ?
வளமும் எங்கே ? வயல்கள் எங்கே ?

தென்னை மரத்தின் கீற்றால் முடைந்த
பாயும் முறமும் கூடையும் குவளைத் தொன்னையும் கூட மனதை விட்டு
அகலா நிற்கும் பசுமை எல்லாம்
எங்கே ? எங்கே ?

காலை எட்டிப் போட்டு நடந்தால்
கம்மாய் கரையும்,
ஏற்றம் இறைத்து நீரைப் பாய்ச்சும்
வாய்க்கால் நுரையும்,
தோப்பின் நிழலை அடையும்போது
தொடரும் மணமும்,
மனதில் இன்றும் நிழலாய் படமாய்
நீங்கா நினைவாய் நின்றே சிரிக்கும் !

எங்கே அந்தப் பழைய முகங்கள் ?
எங்கே அந்தப் பெருமித வரங்கள் ?
வந்தா ரெல்லாம் வாழ வேண்டும்
என்று நினைத்த சீரிய மனங்கள்
எங்கே போயின ? என்ன வாயின ?

வினாக்கள் பலவாய் நிறைந்த போதும் விடைகள் என்றும் ஒன்றே ஒன்று !
பணத்தின் பின்னால் போயின மனங்கள்! 
பாதை மாறிப் போயின சனங்கள்!
சுயநலம் பெருகிப் பொதுநலம் குறுகிப்
புலராப் பொழுதுகள் நீண்டு வளர்ந்தன !
நிம்மதி என்ற சொல்லின் பொருளும் நேரெதிராக மாறிப்போயின !


கி.பாலாஜி
19.07.2019
இரவு 11 மணி

No comments: