Face Book LIKE

Tuesday, November 26, 2019

அனுமன் பஞ்சகம்


அனுமன் பஞ்சகம்


ஸ்ரீ ராம தூதனின் பாதமே
பணிந்திட நலன்கள் கூடுமே!

இலங்கை நகரின் சிறையினில் இருந்த
சீதையின் துயரங்கள் துடைத்தவன் பதமே துணையென நின்றால் துயரங்கள் இலையே! தூயவன் அனுமன் அருள்தரும் நிஜமே !
பாதுகை பணிந்த பரதனே முதலில்
பரமனின் விஜயத்தைப் பற்றிய சேதி
அறிந்திட வேணும் எனவே விழைந்து அனுமனும் பறந்தான், அவன் பதம் சரணம்  !
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

சீறிடும் கடலின் கரையில் பாதம்
வைத்தே எம்பிப் பறந்தான் அனுமன் !
போரிட வைத்த புல்லரை அழித்தான்,
அன்னை முகத்தினில் புன்னகை கண்டான். ராமா யணமெனும் மாலையின் நடுவே
திகழும் ரத்தின திலகம் எனவே
ராக்கதர் களை அழித்திட்ட வாயு
புத்திரன் புகழழைப்  புகன்றிடு வோமே!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
         பணிந்திட நலன்கள் கூடுமே.

தந்தை வாயுவின் வேகத்திற் கிணையாய் தனயனும் மனதின் வேகத்தில் அமர்ந்தான்! இந்தி ரியங்களை வென்றவோர் தீரன் இன்னருள் ராம நாமத்தின் துணையால் அன்னையின் இருப்பிடம் அறிந்தே பறந்தான்! குவலயம் போற்றும் குரங்கினத் தலைவன் திருவடி நாமும் தினம்நினைப் போமே, சிந்தையில் வைத்தே துதித்திடு வோமே!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

அஞ்சனை மைந்தன் அன்னை ஜானகி
மனதைக் குளிரச் செய்தான் புனிதன் !
அட்சய குமாரன் என்னும் அரக்கனின் செருக்கை அழித்தான் சுந்தர ரூபன் !
குபேர நகரைப் போலத் திகழ்ந்த
இலங்கை நகரைத் தீக்கிரை தந்த
குரங்கின் உருவைக் கனவில்கூடக்
கண்டால் கலங்கும் கோலம் தந்தான்!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

கடுகிச் செல்லும் காற்றின் மகிழ்வாய்
பிறந்த புத்திரன் ஆஞ்ச நேயன்,
பாரிஜாத மரத்தின் அடியில்
பரமனைச் சிந்தையில் வைத்தே துதிப்போன், தங்கத் துகளைக் கொண்டு கட்டிய
மண்டபம் போல ஒளிரும் உருவம்,
தலைவன் ராமன் பெயரைச் சொல்லும்  தலங்களில் எல்லாம், இரு கைகூப்பிக் கண்களில் மகிழ்ச்சிப் பெருக்காய் பொழியும்  கண்ணீ ருடனே அமர்ந்தருள் புரிவோன்! கருணைக் கடலை நாமும் துதிப்போம்! காத்தருள் புரிந்தே கூடநின் றிடுவான் ! கண்களைமூடி நாமும்கை கூப்பிக் கணம்கணந்தோறும் திருப்பதம் தொழுவோம்! காகுத்தன் தூதன், எளியவர் நேசன்
என்றும்நம் முடனே  துணைநின் றருள்வான்!
        ஸ்ரீ ராம தூதனின் பாதமே
        பணிந்திட நலன்கள் கூடுமே.

கி.பாலாஜி
06.11.2019

No comments: