Face Book LIKE

Friday, October 19, 2018

காற்றில் கலந்தான் தம்பி கணேசன்.....



காற்றில் கலந்தான் தம்பி கணேசன்
காவிரி ஓடும் குடந்தையில் வளர்ந்த 
ராஜி ராமநாதனின் புத்திரன்
ரம்மிய மாகயெம் சிந்தையி லமர்ந்தோன்!

மனதை நிறைக்கும் மந்திரச் சிரிப்பும் 
பொங்கும் இளமை பூத்த உருவும்
இளமை மாறா திருக்கும் பேச்சும்
இயல்பாய் அமைந்த அருமைத் தம்பி !

இந்த உருவம் ஒன்றே என்னுள் 
என்றும் நிறைந்து நிலைத்து நிற்கும்!
இனிமை பகர்ந்து எண்ணம் நிறைக்கும்!
மறையாச் சுடராய் மனதில் நிலைக்கும்!

அவனுடன் கழித்த நாட்கள் அனைத்தும் 
அரை நொடிக்குளென் மனதில் பொங்கி 
வெள்ளம் நிறைந்த காவிரி ஆறாய்
வெற்றிலைக் கொடிக்கால் பசுமை வெளியாய்

அலையென மோதிக் கலைந்து செல்லும் !
அனைத்தும் நினைவை நிறைத்து வெல்லும் !

சித்திர வடிவிலோர் சின்ன கணேசன்
சிறிய அறைக்குளோர் சைக்கிளில் லமர்ந்து 
சுற்றிச் சுற்றி வந்தெமை நோக்கிப் 
பெருமிதத் துடனே பார்த்தவோர் பார்வை !

இன்றும் மனதில் அகலா திருக்குமிக்
காட்சி யொன்றே குடந்தை சென்ற 
நானும் தங்கை இருவரும் முதலில் 
சின்ன கணேசனைக் கண்டதோர் கடிகை!
அன்றெ மக்குப் பிராயம் எட்டு
அவனோர் இரண்டு வயதுக் குழந்தை!

நாட்கள் கழிந்தன நலன்கள் பெருகின 
நகர மேனிலைப் பள்ளியதனில் 
நல்லாசிரியன் எனப் பெயர் பெற்றான் !
நலமே நவின்றான் நலம் பல புரிந்தான் !

நல்லதோர் நண்பன் ஆனான் எனக்கும் !
அவனுடன் கழித்த நாட்கள் இனிக்கும் !
காலம் வரையும் கோலம் கசக்கும் 
சில பல நினைவுகள் சிந்தையில் நிலைக்கும் !

வாணியின் அருளால் பெற்ற வரத்தினால் 
வளர்த்த மாணவ மணிகள் எத்தனை !
அறிவும் அன்பும் ஒன்றாய் அளித்த 
ஆசிரியப் பெருந்தகை இவனே அன்றோ !

சரஸ்வதி தேவி அருளிய செல்வம்
சமமாய் பகிர்ந்து கொடுத்தத னாலோ 
ஸரஸ்வதி பூஜா தினமாய் பார்த்து
அழைத்துக் கொண்டாள் அன்னை தன்னிடம் !

நினைவில் மாத்திர மேயினி யனைத்தும்!
நெஞ்சம் கனத்த நிலையில் மாத்திரம் !
நீறுபூத்த நெருப்பாய் மனங்கள் 
கனன்று கனன்று கவியும் உள்ளில் !

காலக் காற்று வீசிடும் வீச்சில் 
கனத்த நினைவும் பஞ்சென மெலியும் !
கண்கள் சுழன்று விரியும் கனவில் !
காலை விடியும் காரியம் புரியும் !


--சிந்தையில் நிலைத்தயெம் 
சின்ன கணேசனின்
சிற்ப நினைவை 
வடித்த வரிகள்!

கி.பாலாஜி
அக்டோபர் 18 2018

அகத்தில் நிறைந்த நாதம் !



நாமறி யாமல்
நமக்குள் தோன்றும்
நல்லொரு உணர்வே
நட்பு !
அந்த உணர்வில்
கனிந்த கனியாய்
இருந்தது உமது 
நினைவு!

நினைவில் நிலைத்து 
என்றும் பிரிய 
இயலா ஒருவகை 
உணர்வு 
உம்முடன் எனக்கு 
என்றும் உண்டு 
என்பதை உணர்ந்த 
மனது !

காணும் நேரம் 
வாய்க்கும் போதெல்லாம் 
கனியாய் இனிக்கும் 
பேச்சு !
பதிலுக் கெதுவும் 
எதிர்பா ராத 
பாசம் உமது 
மூச்சு !

அந்த உணர்வு 
காற்றில் என்றும்  
கலந்து எம்முடன் 
உலவும் !
ஆழ்ந்த நினைவாய்
அமுத இசையாய்
அகத்தில் நாதம்
நிறையும் !

மனித நேயம்
என்னும் குணத்தால்
மனதை நிறைத்த
மனிதர் !
உடலை உதிர்த்து
மறைந்த போதும்
உணர்வில் கலந்த
புனிதர் !



-- கி .பாலாஜி
30.09.2018

நட்பாய் நிறைந்த 
திரு.ராஜகோபால் 
அவர்களின் நினைவுக்காய் !

Sunday, October 14, 2018

காமாக்ஷி கருணா ஸாகரீ

காமாக்ஷி கருணா ஸாகரீ

 ராகம் : கமலமனோஹரி/பாகேஸ்ரீ



காமாக்ஷி கருணா சாகரீ
கமலா மனோஹரி
    கடைக்கண் திறந்தெமை
                          கடாக்ஷிப்பாயே.                 (காமாக்ஷி)

    கரும்பு வில்லதனைத்  தொடுத்து
                       புஷ்ப பாணங்க ளெய்து              (காமாக்ஷி)

     கரும்பு வில்லதனைத்  தொடுத்து
     புஷ்ப பாணங்களை எய்து         
     காமக்ரோத மதமாச்சர்யங்களை
                               அழித்தே எமக்கருள் புரிவாயே.      (காமாக்ஷி) 

கலியுகம் தன்னில்
கடுகி வந்தருள் புரி
காஞ்சியில் அமர்ந்த
கற்பகத் தருவே
கணம் கணந்தோறுமுன்
பக்தியில் திளைத்திட
கருணை புரிந்திடும்
                                           கண் கண்ட தெய்வமே.            (காமாக்ஷி)


 -கி.பாலாஜி
 11.10.2018
 காலை 10.45
(PC : Anand and Team)

Friday, August 17, 2018

இயற்கையின் சீற்றம் இயல்பே !

இயற்கையின் சீற்றம் இயல்பே !
------------------------------------------------------------


கணக்கிலடங்காக் குற்றம் புரிந்தோம்
காலத்தினையே சினம் கொளச் செய்தோம்
காட்டினை அழித்து நாட்டினைப் புரிந்தோம் 
கட்டிடங்களைக் காடாய் வளர்த்தோம் 

சூழ்வெளி கெடுத்துப்  பாழ்வெளி படைத்தோம்   
சுந்தரக் காற்றின் சுதந்திரம் கெடுத்தோம் 
ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் துளைத்தோம் 
அருமை கிராமச் சூழலை அழித்தோம் 

செயற்கை உரத்தைச் சேர்த்துத் தெளித்தோம் 
இயற்கை வித்தின் வீரம் அழித்தோம் 
இயற்கை உரங்களை இலையெனச் செய்தோம்
இன்னரு ளமுதின் தரத்தைக் குறைத்தோம் 

தொழில்வள மதனைக் கூட்டிட நினைத்து 
எழில்வள மனைத்தும் இழந்தே நின்றோம் 
தொன்மைக ளெல்லாம் தோற்றுத் தொலைத்தோம் 
தொல்பொருள் பலவும் போயின களைந்தோம்

இத்தனை செய்தும் இன்னல்கள்  புரிந்தும் 
இயற்கை அன்னை பொறுமை காத்தாள்
எல்லை மீறிட அன்னை சினந்தாள்
இருக்கும் அழகை அழித்திட முனைந்தாள்

கண்கெட் டழிந்தோம் கதிரவ னொளியைக்
கண்டிட விழைந்தோம் காலம் கடந்தோம் 
எத்தனை பிழைகள் யாம் புரிந்தாலும்
இத்தனை சீற்றம் தகுமோ தாயே !

அத்தனை பேரும் உன்மக வன்றோ 
அத்தனை அழகும் உன்னழ கன்றோ
எத்தனை வளங்கள் அழிந்து போயின 
எத்தனை உயிர்கள் மடிந்து போயின !

இதுபோல் தவறுகள் இனி நாம்புரியோம் 
இன்னல்க ளிழைத்தோம் இக்கணம் அறிந்தோம் 
எம்மை ஒறுத்தது போதும் நிறுத்தாய் !
எம தன்பேநீ என்றும் எம் தாய் ! 

அன்னை சினத்தால் அழித்தவை யனைத்தும் 
அவளே தருவாள் தவறுகள் மறப்பாள் 
அவள் இனிநினைத்தால் அனைத்தும் மாறும் 
அவள்கண் திறந்தால் பொழுதுகள் புலரும் 

காலை மலரும் கதிரவ னொளிரும் 
பூவைப் போலப் பொன்னொளி படரும் 
பொருந்திய வளங்கள் போற்றிக் காத்திடப்
போயிடும் துயரம் புல்நுனிப் பனியென !

--கி.பாலாஜி
ஆகஸ்ட் 17  2018 
(Written during  #KeralaFloods )

Friday, July 20, 2018

வாராது வந்த மாமணியைத் தோற்றோமோ !

'வாராது வந்த மாமணியைத் தோற்றோமோ' 



காணாமல் தவிக்கின்றோம் 
அந்தக் கண்ணின் மணியதனை,
கேளாமல் தெய்வமீந்த 
வரத்தின் பேரொளியை !

பொழுது விடிந்தால் 
புலனத்தில் அவன்பதிவு
காணாமல் நாமென்றும் 
கடந்து சென்றதில்லை!
பாரதியைக் கொண்டாடிப் 
பாரெங்கும் பவனிவரும் 
பதிவுகள் பலதந்து 
போற்றிப் பரவிடுவான்!

தேசத்தின் நலமொன்றே 
தெய்வமெனப் போற்றிடுவான்
தீய வேடங்கள் 
அனைத்தையுமே தன்னெழுத்தால்
கீறிக் களைந்திடுவான்!
கிழித்தே எறிந்திடுவான்!

பத்திரிகை தருமத்தைப் 
பாலித்தவன் இவனே!
பகட்டற்ற கருணையெனும் 
சொல்லுக்குப் பொருளதனைக் 
காரியத்தால் காண்பித்துக் 
கண்களை நிறைத்திட்டான்!

மறைந்துவிட்டான் எனச்
சொல்வதெல்லாம் பொய்!
மனதில்
நிறைந்துவிட்டான் என்ற 
நினைவொன்றே மெய் !

மந்திரச் சொற்களால் எத்தனை
மனங்களுக்கு பலம் தந்தான்!
மனதார உடனிருந்து
மனங்களின் வலிதீர 
மருந்திட்டு மாயம் 
பலபுரிந்தான்!

மற்றுள்ளோர் அவன்செய்த 
நற்செயல் தனைப்புகழ்ந்து
சொல்கையிலே அல்லவோ 
அறிகின்றோம் நாமும் 
அது குறித்து,
அந்த
அன்பான மனம் குறித்து !

வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல்
எத்தனை செய்துள்ளான்
என்பதனை நாமும்
இன்றன்றோ அறிகின்றோம்!
இதயம் நலிகின்றோம்!

இதனைப் புரிந்துகொள்ள
இப்படிப் பட்டதோர்
இழப்போ தேவையென 
நெஞ்சம் கனலாகி 
நெருப்பினிலே வேகின்றோம் !

வெந்து தணியுமோ 
இந்த வேதனைக்காடு !
வெந்துயர் சாக்காட்டின் 
மனமென்னும் வீடு !!

--கி.பாலாஜி 
05.07.2018

மவுனங்களின் இசை !

மவுனங்களின்  இசை !
---------------------------------------
வெந்தழலும் வெள்ளமும்
தண்மனதின்  வெண்சிறகை
விரித்துச் சிரித்திடவே
சிரித்து மகிழ்ந்திடவே,
சீரியதோர்  செந்தமிழில்
வரியெழுதும் கவியங்கே
வந்து பிறக்கின்றான் !
வான் தொடவே தான் முழங்கி
வண்ணமுற  இசைக்கின்றான் !

எங்கெங்கும் வண்ணமயம்
எண்ணங்கள் அன்புமயம்
ஏந்தி வரும் சொற்களெல்லாம்
இசை கொண்ட நாத லயம் !
பண்ணும் பதமும் தன்
பாதையிலே ஜதிபோடப்
பேச்சற்ற மௌனங்கள்
பாடுகின்ற ராகலயம் !

  பேச்சற்ற மௌனங்கள்
  பாடுகின்ற ராகலயம் !
  பிரபஞ்சமே இமைமூடி
  ரசிக்கின்ற இன்ப வரம் !


--கி.பாலாஜி
  ஜூன் 2018



Monday, May 28, 2018

அன்பின் உருவம் அம்மா !




அன்பின் உருவம் அம்மா !
 அம்மா என்று சொல்லும்போது
அன்பைக் காண்கின்றேன்
அன்பின் உருவும் அவளின் உருவும்
ஒன்றென அறிகின்றேன்

அம்மா காட்டும் அன்புக் கென்றும்
காரணம் கிடையாது
அம்மா காட்டும் பரிவுக்கென்றும்
விலையே கிடையாது

அம்மா என்றொரு சொல்லின் சுகமோ
சொல்லில் அடங்காது
அம்மா என்பது ஆரம்பம் அது
என்றும் முடியாது

அன்னையின் கடனைத் தீர்க்க நினைப்பது
ஆபத்தே யாகும்
அன்னையின் நினைவு என்னும் நிழலில்
வாழ்வது வரமாகும்  



--கி.பாலாஜி
13.05.2018

This has been composed and beautifully rendered by my wife LAKSHMI BALAJI, which you can hear by clicking this link
https://soundcloud.com/saransang/lb-anbin-uruvam-amma-online-audio-convertercom

Tuesday, June 6, 2017

உலகின் மூத்தகுடி உழவன்

(Photo Credit : Times of India)

உணவும் உடுக்கையும் 
இழந்த உழவனின் 
இடுக்கண் களைவ தாரிங்கே ? 

உண்பதோர் நாழி 

அளப்பதற் காளில்லை

உடுக்கும் நாலுமுழம் 

கிடைக்க வழியில்லை

மயிர்போயின் வாழாக் 

கவரிமான் போலிங்கு 
வாழ்ந்தும் ஆயிற்று ! 

சுவாசிக்கும் காற்றுக்கும் 

விலை கேட்கும் காலம்வரும் ! 
வீதியில் விழுந்து 
புரண்டலையும் நேரம் வரும்!

பிச்சையோ நாம் கேட்கின்றோம்?  

பிழைக்க வழி யாமறிவோம் ! 
பிழைத்தும்மைப் பேணவும் 
யாமறிவோம்!   

வீழ்ந்துலகைக் காக்கின்ற 
மழைத்துளியை 
வீணாக்கி விடவேண்டாம் ! 
விவசாயம் செய்வதற்கு 
வகை செய்தால்

அதுபோதும்! 

வீதிவரை வரும் தென்றல் 

வீட்டினுள்ளும்  நுழைந்தெம்மை  
நலன் விசாரிக்கும் 
நாள்தோறும்! 

விவசாயம் செய்திடவே 
வகை செய்து தாரும் !

விவேகம்  அதுவே !  

விளக்கமும் அதுவேதான் !  

சுழன்றும்  ஏர்ப் பின்னதே 
உலகென்பார்!  
சுழன்று   கொண்டேதான் 
இருக்கின்றான் உழவன்  !
துன்பத்தில்   
உழன்று  கொண்டும்தான் !


உணவின்றி நாட்டின் 

உழவன் மரிப்பதுவோ ?
உணவை அளிக்கின்ற அவனன்றோ 
உலகின் மூத்தகுடி ! 
உணர்வீர்  அவன் பெருமை! 
உணவின்றி அவன்மரித்தால் 
உலகே மரிப்பதுபோல் ! 
அன்னை மனம் நொந்தால் 
அவர்மக்கள் வாழ்வாரோ 
வளம்பெற்று ?


--கி.பாலாஜி

10.04.2017

மாலை 4.15

Saturday, March 11, 2017

போதி மரம் !



பால்வெள்ளி நிலா வீசும்
பகட்டுத்தா ரகைகள் மின்னும்  
பலவண்ண நிறங்கள் காட்டும்
வான மேயென் கல்விச் சாலை !
    வான மேயென் கல்விச் சாலை !
    வாழ்வினைப் பயக்கும் சோலை !

நேற்றைக்கு அழுமாற் போலே 
அமுதத்தைப் பொழிந்த வானம்
இன்றைக்குத் தெளிவாய் நின்று 
சிரிக்கின்ற தென்னே யென்றேன்!

எல்லையற்ற தன்மை கண்டென் 
எண்ணமும் விரியக் கண்டேன் 
சிந்தனை, வானம் போலே 
விரிந்தாலே விடியும் என்றேன் !

எழிலார்ந்த காவும் கண்டேன்
எத்தனையோ மலர்கள் கண்டேன் 
முன்னின்ற மலரின் செடியில்
முள்ளொன்றும்  இருக்கக் கண்டேன் 

இன்பங்கள் என்றும் உண்டு
இடையிடையே துன்பம் உண்டு
என்பதை உணர்த்தும் பாங்கில் 
முள்ளதுவும் சிரிக்கக் கண்டேன்

வண்ணத்துப் பூச்சி பூவைச் 
சுற்றிவந்தமரக்   கண்டேன் 
சுவையான தேனை யதுவும்
சுவைத்துண்ணும் பாங்கு கண்டேன் 

புவிவாழ்வு சிறிதென் றாலும் 
பூவினில் தேனைப் போலே 
நிறைந்திடும் இனிமை உண்டு
நீயதை உணரல் வேண்டும் 

என்றெனக் குணர்த்தும் வண்டு
எண்ணத்தில் அமர்ந்து கொண்டு 
ஏழிசை கீதம் ஒன்று 
தன்னுள்ளே பாடிக் கொண்டு !

இதுநாளும் தேடித் திரிந்த 
குருவைநான் கண்டுகொண் டேன் 
காண்கின்ற பொருள்க ளெல்லாம் 
குருவேயென் றுணர்ந்து கொண்டேன் 

'எப்பொருள் யார்யார் வாய்க் 
கேட்பினும் அப்பொருள் தன்னில்'
உறைகின்ற உண்மை தன்னை
உணர்த்துமோர் குருவைக் கண்டேன் !

--கி.பாலாஜி
05.08.2016

Wednesday, March 8, 2017

மகளிர் தினம்தினம்

மகளிர் தினம் தினம்
_____________________
மாலையாய் வாழ்வில் நுழைந்து
மதலையால்
இல்லம் நிறைத்து,
மனமாளும்,
மனையாளும்
மனைவியாய்
இல்லுள்ளோர்
இதயம் நிறைத்து,
என்றென்றும்
எல்லோர் வாழ்வும் மலர்மணம்
பரவச் செய்யும்
மகளிருக் கொவ்வொரு நாளும் மங்கலப் பெருநா ளென்போம்
நாம்
மாதவம் செய்தோ ரென்போம் !
--மகளிர் தின வாழ்த்துக்கள் !
----கி.பாலாஜி
08.03.2017
பகல் 12 மணி

Monday, November 21, 2016

வீதியோரம் வீழ்ந்த மலர் !

வீதியோரம் வீழ்ந்த மலர் !

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ஒரு
'பாதையோர மலராக',
பார்ப்பவர்  கண்ணுக்கு
முள்ளாக,
எந்த நேரமும்
பறந்து செல்லக்
காத்திருக்கும்
பதராக.......
ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ராகமில்லாத
இந்த வரிகள்
எந்த ரகம்?
என்ன பயன்?

மீட்டும் விரலின்றி
வாடுமொரு
வீணையின்
தந்தியாய்,
வியக்கும் கண்களின்றி
ஏங்கும் ஒரு
விசித்திரச் சிற்பமாய்,
விழலில்பாய்கின்ற
வெள்ளத் துளிகளாய்,
வேனலின் வெக்கையாய்,
கானற்பாலையில்
கனலும் முட்களாய்,
கண்களின் ஓரத்தில் காய்ந்த
கண்ணீர்த் துளிகளாய்,
என்றும் எவருக்கும்
ஏற்காத பாரமாய்,
கனியாத எட்டியாய்,
விரியாத மொட்டாய்,
விடியாத இரவாய்,
வேண்டாத வாழ்வாய்,
பணியாத வீம்பாய்,
பாழ்மனத் தீயினில்
வெந்திடும் நாளமாய் ....

விடியலைக் கனவினில்
கண்டதோர் குளுமையில்,
வேதனை மரத்த
மனத்துடன்
இன்னும்....

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !!
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !


--கே. பாலாஜி
  21.11.2016
இரவு 8 மணி



Monday, June 27, 2016

'அம்மா' என்றொரு அற்புதம் !

'அம்மா' என்றொரு அற்புதம் ! ********************************
'அம்மா' என்றொரு
அற்புதக் களஞ்சியம் !
இன்று
நான் அலறி அழைத்தாலும்
வாராத, மனதில் 
ஆறாத காயமாய்  
அருகி நின்றுவிட்ட
நினைவுப் பெட்டகம் ! 

காலச் சுவடுகளாய்
நிலைத்து நின்றுவிட்ட
அம்மா என்றவொரு
அற்புத நினைவு ! 
ஆறாத வடுவாக
ஆனாலும் 
மனதில் 
அன்பாக வருடும் 
அற்புத நினைவு !
இனிமைக்கு இனிமை
கூட்டும் 
இதயத்தைத் தாலாட்டும்
இன்னிசை மழையாய்
என்றைக்கும்
உள்நிலைக்கும்
அம்மா என்றவொரு 
அற்புத நினைவு ! 

அம்மா என்றொரு அற்புதம் ! 
அம்மா என்றும் 
அற்புதம் ! 

 --K.Balaji May 08 2016

Sunday, January 10, 2016

இயற்கை போற்றுக !




கருத்து வரும் மேகம் கண்டு 
  கவலை கொள்ளும் தாய் மனம்
கண்ணி மைக்கும் நேரத் திலே
  காலம் மாற்றும் மண் மணம் !

பேரி ருளாய் வந்து நின்று 
  பெரும ழையாய் மாறி டுமோ 
காற்று வந்து கருமே கம்
  கலைந் தே சென்றி டுமோ

அன்ற லர்ந்த மலர்க ளுடன் 
  அது போன்றே சிரித் திருக்கும்
பிஞ்சு மனக் கனவு களின்
  பெருங் கோலம் கலைந்தி டுமோ ?

கணங் கணமாய் வாழ்வி னிலே 
  'கண்டங் கள்' கடப்பதுதான் 
பெண் பேதை கேட்டு வந்த 
  பெரு வரமோ அறியே னே !

வேண்டி வந்த நேரத் தில்
  வேடிக் கை காட்டி நின்று 
வேண் டாத பொழுதி னிலே 
  பொழிவ திலே என்ன சுகம்?

தாக்க வந்த தடையெல் லாம்
  தாங்கிக் கடந்து  வந்தேன் 
பொங்கி வரும் வேளை யிலே
  போக்க ழித்து விடவேண் டாம்!

பொறுத்தி டுவீர் குறையெல் லாம் 
  போற்றி டுவோம் என்றென் றும்
இன்னுமொரு சுழிக் காற்றை 
  யெம்மி தயம் தாங்கா து !

இயற்கை வள மென்றும்
  இனி நாங்கள் காத்தி டுவோம் 
ஈசன் திருவ ருளை 
  என்றும் வேண்டி டுவோம் !  

-K.Balaji
 Jan 09 2016
 9 PM

Tuesday, December 15, 2015

வளங்களை அருளும் லக்ஷ்மி வருவாயே

வளங்களை அருளும் லக்ஷ்மி வருவாயே

This is a Tamil Translation done by me of the famous 'Bhagyadha lakshmi baramma' wriiten in Kannada by Purandara Dasaru.  

A link of the Kannada Song is given below so that the tamil version can be sung in the same tune .
https://www.youtube.com/watch?v=Kk_qZOL7R3w


வளங்களை அருளும் லக்ஷ்மி வருவாயே
                                                        என் தாயே 
வளங்களை அருளும் லக்ஷ்மி வருவாயே !               (வளங்களை) 

திருவடித் தாமரை திருவாய் மலரத்
திருவடிச் சலங்கை மணியாய் மொழிய
தவத்திரு வடியார் பூஜிக்கும்  வேளையில்
கடைந்திடும் தயிரில் திரளும் வெண்ணைபோல்     (வளங்களை) 

பொன்மழை தனையே பொழிந்திட வாராய்
என்மனை மனமும் விளங்கிட வாராய்
கதிரவ னொளியா யருட்கதிர் வீசிட 
ஜனகனின் மகளாம் ஜானகி வாராய்                           (வளங்களை) 

சுத்த மனத்துடன் பக்தியில் திளைத்திடும் 
பக்தரின் மனைகளில் நித்திய மங்கலம்
சத்தியம் போற்றும் சான்றோ றவர்களின்
சித்தம் நிறைந்திடும் புத்தொளியே நீ                          (வளங்களை) 

அளவே யில்லா வரங்களை அருள்வாய் 
வளையிட்ட கைகளால் ஆசிகள் அருள்வாய் 
குங்கும நாயகி பங்கயக் கண்ணி 
வேங்கட ரமணனின்  செங்கமலத் திரு                        (வளங்களை) 

இனிப்புச் சர்க்கரை நெய்கலந் தாற்போல் 
இனியதோர் வெள்ளியில் பூஜா வேளை 
அந்த மிக்கநின்  அழகிரி ரங்கனின் 
அருள்கொண் டெமையே ஆண்டிட வருவாய்            (வளங்களை) 


---K.Balaji
December 15 2015 12 pm

Monday, April 6, 2015

முதுமையை வெல்க !



நேற்றைய நினைவுகளின்
நேசக்  காற்றடிக்க
நெருடல்க ளொருபுறம்
நெஞ்சைக் கீறின !

யாரோ உருட்டிவிட்ட
தகரத்தின் சப்தங்கள்
செவியோரம் சேர்ந்துவந்து
சோக கீதம் இசைத்தன !

என்ன இதன் பொருள் என
எண்ணத் தலைப் பட்டேன் !
என்னையே நான்
கேட்டுக்கொண்டேன் !

முன்னிற்கும் முதுமைக்கு
முன்வரவு  சொல்லவொரு
சூசகமோ என்றெனக்குத்
தோன்றியது பொய்யல்ல !

முதுமைக் கோருருவம்
முன்னின் றெனைநோக்கி
முகமன் உரைப்பதுபோல்
உரைக்கும் சிலசொற்கள் :

'சொல்மொழி செலும்தூரம்
நின்விழி செல்லாது
விழிசெல்லும் இடமெல்லாம்
மெய்செல்ல வொண்ணாது

மனம்செல்லும் இடமெங்கும்
துணைநிற்க வியலாது
மதியெங்கும் இயலாமை
தன்பிடியைத் தளர்த்தாது !

பங்கேற்கும் துணையொன்றும்
இல்லாத காலத்தில் - வாழ்க்கைப்
படகோ இடம்விட்டு
நகராத கோலத்தில் !

அசையாத வெள்ளத்தின்
இடையே  அகப்பட்டு,
அழியாக் காலத்தின்
வழிசேரும் கோலத்தில் !

எவராலும் தவிர்க்க
முடியாத முதுமையிது!
எதிர்கொள்ளும் துணிவோடு
மனதார வரவேற்பாய் !

மனத்தால் இளமைபெற்று
மதியில் ஞானம் பெற்று
ஈவாய்முதுமைக்கும் இளமை - இசைபட
வாழ்வாய் ! என்றைக்கும் இனிமை !'

K.Balaji
March 12 2015 
12 a.m.

Monday, September 3, 2012

வாணீ அருள்வாய்!


வாணிஅருள்வாய்!       ராகம்: மலஹரி


வெள்ளைக் கலையுடுத்தி வேதப் பொருள் விளங்க
வீணை யிசைத்து வரும் வாணியே
தெள்ளுத மிழில்மன மள்ளும்வ கையிலொரு
பாட்டி லுனை வாழ்த்த அருளுவாய் !

அஞ்சு மன மதனின் அலையும் நிலைய கற்றி
அமைதி யெனைய டைய அருளுவாய்
கெஞ்சும் எனைப் பார்த்து கொஞ்சும்ரா கங்கள்
கோடி உளம் சேர அருளு வாய்!

சொல்லும் பொருளுமெனச் செல்லு மிணைசேர்த்து
இசையை யுடன்சேர்த்து வாழ்த்துவேன்!
வெல்லும் வழிகாட்டி வேட்கை தனையோட்டி
வேண்டும் கல்விதந்து தேற்றுவாய்!

காலம் முழுமைக்கும் கண்கள் தனைமூடிக்
கருணை யுனைப் பாட வேண்டுவேன்!
கற்ற கல்வி என்றும் உற்றதுணையென்று
உதவி எனைக்காக்கச் செய்குவாய்!

மௌன நாதம் !

                                          மௌன நாதம்

சம்போ மஹாதேவ தேவா - சிவ
சம்போ மஹாதேவ தேவேச சம்போ                                          (சம்போ)

அலைபாயும் மனமிந்த நேரம் - சிவ
சம்போ வென்றுன்பா தம் தனை நாடிப் போகும்
அன்பேதா னுருவான தெய்வம் - நீ
அணைப்பா யென்றறிவேனுன் துணைநாடி வந்தேன்          (சம்போ)

எங்கெங்கு சென்றாலும் உள்ளே - சிவ
சம்போசம் போவென் றுன் நாம மொன்றே
ஓமென்ற ஒலியாகிப் பெருகும் - என்னில்
பலநாளாய் விளங்காத பொருளெல்லாம் விளங்கும்            (சம்போ)
                                                                                     
ஐந்தெழுத்து மந்தி ரம்நாதம் - மௌன
குருவாகி உபதேசம் செயவந்த வேதம்
வரவேண்டும் வரவேண்டும் ஞானம் - அது
வந்தால்பின் னெதுவேண்டும் எனவேண்டும்  மௌனம்       (சம்போ)

மணக்குள விநாயகன் !



                                  மணக்குள விநாயகன்     ராகம்: ஹம்ஸத்வனி

மணக்குள விநாயகனே
மனத்துள் நீ நாயகனே
மந்திரப் பொருளோனே
மங்களம் அருள்வோனே                                                       (மணக்குள)

எருக்கம் பூவிற்கும் ஏற்ற்ம் தந்தாய்
எதிர்ப் படுவோர்க்குத் துணிவைத் தந்தாய்
சூட்டிய மாலையில் சுடரொளித் தோனே
சுந்தரன் மகனே சுகம் தருவோனே                                    (மணக்குள)

செம்மலர்ப் பதம்நாடி வந்தனை புரிந்தே
வந்துனைத் துதிப்போர்க்கு வாழ்வளிப் பவனே
இம்மெனும் முன்னே ஈந்தனை வரம்நீ
இகபரம் இரண்டுக்கும் இனியொரு துணைநீ                 (மணக்குள)

(K.Balaji  October 25 1989)

Wednesday, November 11, 2009

லிங்காஷ்டகம்(LINGASHTAKAM)





"Lord Shiva represents the aspect of the Supreme Being that continuously dissolves to recreate the cyclic process of creation, preservation, dissolution and recreation of the universe. Lord Shiva is the foremost of the Hindu Trinity, the other two being Lord Brahma and Lord Vishnu. Lord Shiva is the Lord of mercy and compassion. He protects devotees from evil forces such as lust, greed, and anger. He grants boons, bestows grace and awakens wisdom in His devotees.

In Temples Lord Shiva is worshiped in the form of 'Lingam'.The Lingam is a symbol. It is a symbol of that which is invisible yet omnipresent. It is hence a a visible symbol of the Ultimate Reality which is present in us (and in all objects of creation)".

The Shloka (Prayer) "LINGASHTAKAM" is being recited by most of the Hindhus, since ages. The author of the same, though presumed to be Adhishankaracharaya, proper references to that effect are not available, it is heard.
Lingashtakam presented by Sri S P Balasubramanyam can be enjoyed in the below given video presentation!

A Tamil version which can be sung along with the above, is given below: I am humbly proud of the fact that The Lord wrote this through me on August 08, 1985,about 24 years ago! Viewers may please have a look !

லிங்காஷ்டகம்

அரிமுதல் தேவர் வணங்கிடும் லிங்கம்
அழகிய சிவனுரு அற்புத லிங்கம்
பிறவிப் பெருந்துயர் நீக்கிடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை அழித்த கருணா லிங்கம்
ராவண கர்வ மொடுக்கிய லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

அளவற்ற மணங்கள் வீசிடும் லிங்கம்
அறிவு வளர்ந்திடக் காரணம் லிங்கம்
அரக்கரும் தேவரும் வாழ்த்திடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

வைரத்தில் மாலை அணிந்திடும் லிங்கம்
வளர்ந்திடும் அழகுக் கழகெனும் லிங்கம்
தக்ஷனின் யாகம் அழித்தது லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் கொண்டிடும் லிங்கம்
பங்கய மாலையில் ஒளிர்ந்திடும் லிங்கம்
எங்கணும் பாவம் ஒழித்திடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

தேவகணஙகள் துதித் திடும் லிங்கம்
பக்தியில் கிடைக்கும் காட்சியும் லிங்கம்
ஒளிதரும் கோடி கதிரவன் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

எட்டுத் திக்கினை ஏற்றிடு லிங்கம்
எங்கும் எதற்கும் காரணம் லிங்கம்
ஏழ்மைப் பேயை விரட்டிடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்

தேவகுரு வரம் வேண்டிடு லிங்கம்
தேவ வனத்துப் பூபெறும் லிங்கம்
தேவ பதங்கள் அளித்திடும் லிங்கம்
ஓமெனும் மந்திரத் துறைசிவ லிங்கம்


லிங்காஷ்டக மிதைப் படிப்போர்
சென்றடைவார் சிவன் பதங்கள்
சிவலோ கம் சென் றடையச்
சிவபெருமான் துணை பெறுவோம்


(05.08.1995 MONDAY 5.30 a.m)

Tuesday, November 10, 2009

அம்பிகைப் பத்து !



அம்பிகைப் பத்து
ADHI SHANKARACHARYA's verse in Sanskrit "Ayi Giri Nandhini" written in praise of Durga Maa, is a very famous one, which is recited by almost all Hindhus regularly, especially during Navarathri.

SUPREME MOTHER DURGA made me an instrument in writing the following verse in Tamil in praise of HER, which can be sung in the same tune used for the Sanskrit verse "Ayi Giri Nandhini". The speciality of this Tamil verse is that it was written on the day of Saraswathi Pooja in 1993 ! Another speciality is that each stanza starts with the vowel letter in its regular order! I don't say that this Tamil version is a translation of the Sanskrit one, but it is a fact that, the original one has been the spirit and motivation for writing the Tamil one!

Given below is a video of the Sanskrit verse of Adhi Shankara, sung by Sri S.P.Balasubramaniam in his melodious voice. One may enjoy this and sing along with it the Tamil verse also, which is written down below !



’அம்பிகைப் பத்து’ பாடலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு கண்ணியும் உயிர் எழுத்தின் வரிசையில் தொடங்குவதாக (’அ’ முதல் ‘ஓ’ வரை) அமைந்துள்ளதுதான் !

===================================

அருள்தரு நந்தினி யுன்திருப் பதமே
துணையென நம்பி சரண்புகுந் தேன்
ஆயிரம் நாவுடை அரவினில் துயின்றிடும்
அரஙகனின் தங்கையே ஆதரிப்பாய் !

அருமறை போற்றிடும் அம்பிகை யுன்பெயர்
ஆயிரம் முறைதினம் நானுரைத் தேன்
அருட்கடைக் கண்திறந் தேயெனைக் காண்பாய்
ஆயிழை யேஅருட் பேரொளியே !

இம்மெனும் முன்னமீ றாயிரம் சொல்தரும்
இன்னுயி ரேயுனை நான்பணிந் தேன்
இமய மலையுறை ஈசனின் இறைவியே
இன்றுபோ லென்று மெனக் கருள்வாய் !

ஈசனின் இன்னுயிர் பாக மெனத்திகழ்
இன்பக லாமயி லேகுயி லே !
இகபர சுகமென ஈந்தெமைக் காத்திட
இலங்கிடும் கருணையின் வா ரிதியே !

உலகம்பு ரந்திடும் உமையவ ளேயுனை
ஓர்கண மும்மற வாதிருப் பேன் !
உன்நினை வேநினை வென்றிருப் பேனினி
உய்ந்திடும் வழிதனைக் கண்டிருப் பேன்

ஊழி தனில்திருத் தாண்டவ மாடிடும்
உண்மையின் நாயகி யேதுணை யே
உருவென அருவென உலகினில் நிலவிடும்
ஓர்பொரு ளெ ஒளிப் பேரரு ளே !

எழிலுக்கு எழில்தரும் எழிலுரு வேயுனை
ஏற்றித் துதித்திடும் பேறளித் தாய் !
என்றுமென் றும்முனை என்னகத் திருத்தியே
ஏற்றம் அளித்தருள் நீஎன் தாய் !

ஏழையென் அகமெனும் பேழையில் இலங்கிடும்
எழிலுறு சோதி யெனும்திரு வே !
என்னுயிர் மனமிரு வேறாயிருப் பது
என்றுன தருளா லிணைந்திருமோ ?

ஒவ்வொரு அணுவிலும் ஒளியெனத் திகழோ
ராயிரம் இதழ்கொண்ட தாமரை யே !
ஒருகணம் மனமொன்றி உனைக்காண் பவர்க்கே
ஊழ்வினை யகன்றிடு மேநிஜமே !

ஓமெனும் மந்திரத் துறைபொரு ளாகிடும்
ஒலியதற் கோருரு வானவ ளே !
ஓர்மன தாயுனை எண்ணிடு வோர்தமக்
குள்ளொளி காட்டி யருள்புரி வாய் !

(23.10.1993 மாலை 5.30 ஸரஸ்வதி பூஜை தினம்!)