Face Book LIKE
Friday, December 27, 2019
சொல்லாலே பந்தல்...
உரிக்க உரிக்க.....
Tuesday, November 26, 2019
அனுமன் பஞ்சகம்
பணிந்திட நலன்கள் கூடுமே!
சீதையின் துயரங்கள் துடைத்தவன் பதமே துணையென நின்றால் துயரங்கள் இலையே! தூயவன் அனுமன் அருள்தரும் நிஜமே !
பாதுகை பணிந்த பரதனே முதலில்
பரமனின் விஜயத்தைப் பற்றிய சேதி
அறிந்திட வேணும் எனவே விழைந்து அனுமனும் பறந்தான், அவன் பதம் சரணம் !
ஸ்ரீ ராம தூதனின் பாதமே
பணிந்திட நலன்கள் கூடுமே.
வைத்தே எம்பிப் பறந்தான் அனுமன் !
போரிட வைத்த புல்லரை அழித்தான்,
அன்னை முகத்தினில் புன்னகை கண்டான். ராமா யணமெனும் மாலையின் நடுவே
திகழும் ரத்தின திலகம் எனவே
ராக்கதர் களை அழித்திட்ட வாயு
புத்திரன் புகழழைப் புகன்றிடு வோமே!
ஸ்ரீ ராம தூதனின் பாதமே
பணிந்திட நலன்கள் கூடுமே.
ஸ்ரீ ராம தூதனின் பாதமே
பணிந்திட நலன்கள் கூடுமே.
மனதைக் குளிரச் செய்தான் புனிதன் !
அட்சய குமாரன் என்னும் அரக்கனின் செருக்கை அழித்தான் சுந்தர ரூபன் !
குபேர நகரைப் போலத் திகழ்ந்த
இலங்கை நகரைத் தீக்கிரை தந்த
குரங்கின் உருவைக் கனவில்கூடக்
கண்டால் கலங்கும் கோலம் தந்தான்!
ஸ்ரீ ராம தூதனின் பாதமே
பணிந்திட நலன்கள் கூடுமே.
பிறந்த புத்திரன் ஆஞ்ச நேயன்,
பாரிஜாத மரத்தின் அடியில்
பரமனைச் சிந்தையில் வைத்தே துதிப்போன், தங்கத் துகளைக் கொண்டு கட்டிய
மண்டபம் போல ஒளிரும் உருவம்,
தலைவன் ராமன் பெயரைச் சொல்லும் தலங்களில் எல்லாம், இரு கைகூப்பிக் கண்களில் மகிழ்ச்சிப் பெருக்காய் பொழியும் கண்ணீ ருடனே அமர்ந்தருள் புரிவோன்! கருணைக் கடலை நாமும் துதிப்போம்! காத்தருள் புரிந்தே கூடநின் றிடுவான் ! கண்களைமூடி நாமும்கை கூப்பிக் கணம்கணந்தோறும் திருப்பதம் தொழுவோம்! காகுத்தன் தூதன், எளியவர் நேசன்
என்றும்நம் முடனே துணைநின் றருள்வான்!
ஸ்ரீ ராம தூதனின் பாதமே
பணிந்திட நலன்கள் கூடுமே.
06.11.2019
இதுவரை எழுதாத கவிதை...
என்முன்னில் நீ வந்து நின்றாய்
இதுவரை சொல்லாத கதையொன்றின் உருவமாய்
என்னோடு நீ கலந் திருந்தாய்
இதுவரை அறியாத உணர் வொன்றின் பொருளாய்
இதுவரை காணாத நிலவின் கதிராய்
நீண்டு என் அருகினில் நின்றாய்
இதுவரை பாடாத ராகத்தின் ஸ்வரமாய்
18.11.2019
Sunday, November 24, 2019
உன்னை நீயே உணர்ந்து கொள்
உந்தன் திறனைப் புரிந்து கொள்
உன்னை நீயே விரும்பா விட்டால்
ஊரார் விரும்பி என்ன பயன்?
உனக்கு அவையே அரண் ஆகும்
உனக்கு வலிமை சேர்க்கும் நல்ல
தூண்கள் அவையே தான் ஆகும்
ஏதோ ஒன்று அழைக்கிறது
உந்தன் திறமை என்ன என்று
அதுவே காட்டித் தருகிறது
விளக்கொளி ஒன்று உருவாகும்
விரிந்த இருட்டை விலக்கி கொள்
விதியை மதியால் மாற்றிக்கொள்
உலகம் பயனுறச் செயல் புரிவாய்
உதறித் தள்ளிய உலகே உன்னை
உயிராய் எண்ணிக் கொண்டாடும்
உந்தன் திறனைப் புரிந்து கொள் !
02.08.2019
இரவு 10.30
கண்ணயர்ந்துறங்கையில்...
கனவொன்றின் காலடிப்
பொற் சிலம்பொலிநான்
கேட்டெழுந்தேன் . (கண்)
முதன்முதல் மலர்கின்ற
மாதுளைப் பூவின்
மணம் போலே
நினைக்காத நேரத்தில்
நெகிழ்ந்தொரு தருணத்தில்
நித்திலமே நீ என்
அருகில் வந்தாய் . (கண்)
பாற்கடல் நீந்தி வரும்
விண்ணதன் வெண்மேகக்
கொடிபோலே
பொன்னொளிர்க்
கனவொன்றின்
ஏதோ நினைவிழைத்
தும்புரு மீட்டி
நீ வந்தாய். (கண்)
வழி மாறி வந்து நின்ற
வசந்தத்து நிலவதனின்
கதிர் போலே
முகத்திரை தானணிந்த
மௌனத்தின் லயம்போலே
முன்வந் தழைக்காமல்
நீ வந்தாய் (கண்)
29.07.2019
பூமிக்கு வந்த பூரண சந்திரன்
புன்னகை புரிகின்ற தோ
பூக்களில் ஆடும் பொன்மழைத் துளியாய் பேரெழில் படைக்கின்ற தோ
கவிதைகள் பிறக்கின்ற தோ
தேரொன் றெழுந்து தோரணம் அசையத் தெருவினில் வருகின்ற தோ
மாலை நேரத்துச் சூரியக் கதிராய்
மங்கலம் அளிக்கின்ற தோ
குழலில் மிளிர்கின்ற தோ
மாதின் குணநலம் யாவும்தெய்வ
வடிவில் வளர்கின்ற தோ
15.09.1981
எங்கே அந்த சொர்க்கம் ?
தேடித் தேடி அலைகின்றோம் !
எங்கே அந்தத் தெய்வமணம் சூழ்
தென்றல் காற்று?
எங்கே அந்தத் தேனமுதம் போல்
தெள்ளிய தண்ணீர் ?
என்றும் எங்கள் கிராமத்தின் பால்
ஓடும் வெள்ளி ஓடை எங்கே?
எங்கே அந்தத்
தோட்டமும் துரவும் ?
எங்கே அந்தப் பசுமை வயலும்
வரம்பும் நாற்றும்
பாலை ஈயும் பசுக்கூட் டங்களும்?
தேனிகள் மொய்க்கும்
தேனடை எங்கே ?
அக்கூ அக்கூ வென்றே கூவும்
அந்தப் பறவைக் குரலும் எங்கே?
குயிலும் மயிலும் நிறைந்து காணும்
சோலை எங்கே? சொர்க்கம் எங்கே?
மனித இனத்தின் துணையாய் நின்றே
ஊர்ந்து சென்ற நாட்கள் எங்கே?
இயற்கை என்பது இயல்பாய் நிறைந்த மனங்கள் எங்கே ?
ஆற்றின் வடிகால் நீரும் எங்கே ?
நின்றால் நடந்தால் நிம்மதி ஒன்றே
கூட நடக்கும் நாட்கள் எங்கே ?
மட்டுமே நடந்த வாழ்க்கை எங்கே ?
வளமும் எங்கே ? வயல்கள் எங்கே ?
பாயும் முறமும் கூடையும் குவளைத் தொன்னையும் கூட மனதை விட்டு
அகலா நிற்கும் பசுமை எல்லாம்
எங்கே ? எங்கே ?
கம்மாய் கரையும்,
ஏற்றம் இறைத்து நீரைப் பாய்ச்சும்
வாய்க்கால் நுரையும்,
தோப்பின் நிழலை அடையும்போது
தொடரும் மணமும்,
மனதில் இன்றும் நிழலாய் படமாய்
நீங்கா நினைவாய் நின்றே சிரிக்கும் !
எங்கே அந்தப் பெருமித வரங்கள் ?
வந்தா ரெல்லாம் வாழ வேண்டும்
என்று நினைத்த சீரிய மனங்கள்
எங்கே போயின ? என்ன வாயின ?
பணத்தின் பின்னால் போயின மனங்கள்!
சுயநலம் பெருகிப் பொதுநலம் குறுகிப்
புலராப் பொழுதுகள் நீண்டு வளர்ந்தன !
நிம்மதி என்ற சொல்லின் பொருளும் நேரெதிராக மாறிப்போயின !
19.07.2019
இரவு 11 மணி
காதல் என்பதற்கழிவில்லை!
வாழா மன மில்லை
கனவும் நினைவும் காதலின் துணையால்
காணும் ஓர் எல்லை (காதல்)
இழுத்துச் சென்றதே -காதல் (2)
இன்பம் என்றால் என்னவென்று
சொல்லித் தந்ததே
கனவுக ளெல்லாம் கானல் நீராய்
மறைந்தே போனதே
நனவுக ளென்னும் நெடுமூச் சொன்றில்
கரைந்தே போனதே (காதல்)
காதல் ஒன்றுதான்
என்மனம் தன்னில் நிலையாய் நிற்பதும்
உந்தன் நினைவுதான்
உறவுகள் என்றும் மறைவ தில்லை
அந்த உருவம் மறைந்தா லும்
உணர்வுக ளென்றும் அழிவதில்லை
அந்த உறவே அழிந்தாலும் (காதல்)
16.07.2019
பகல் 12 மணி
நினைவுகளே
பூச் சரங்கள் ஆடிட வாருங்கள்
வண்ணப்பூச்சில் எண்ணச் சிறகை
வருடித் தந்திட வாருங்கள். (நினைவுகளே)
எழுந்து நிமிர்ந்து பாய்ந்திடுதே
கண்ணீர் அருவி ஆனந் தத்தில்
கடலாய் பெருகி ஓடிடுதே
களித் தோடிடுதே. (நினைவுகளே)
பாகாய் இனித்து உருகிடுதே
வெள்ளிச் சதங்கை போலொரு நாதம்
வேனல் மழையாய் பொழிகிறதே...
(நினைவுகளே)
14.07.2019
இரவு 08.30
சேவற்கொடி நாயகன்
அந்த மிகு செந்தமிழில்
அன்பருக்கு அருள்புரியும்
ஆறுமுக வேலவனே !
முக்காலும் உனைப்பாட
முந்தி வந்து அருள் புரிவாய்
முத்தமிழின் பேரெழிலே !
சிந்தையதில் தெளியவைத்தாய்
சித்திரத்தைப் போல் எழுதி
சித்தமதைக் குளிர வைத்தாய்!
சோதியுனைப் பாட வைத்தாய்
சொற்களுக்குள் அடங்காத
அற்புதமே ஆறுதலே !
சூரனுக்கும் பேறளித்தாய்
ஆலால சுந்தரனின்
சேயாக வந்தவனே !
ஆலமுண்ட நாயகற்கும்
கோலமுறச் சொல்லிவைத்தாய்
சேவற்கொடி நாயகனே!
31.10.2019
பகல் 2.30
Sunday, October 20, 2019
உயிர் நீ உடல் நான்
உயிர் நீ உடல் நான். ராகம்: ஆனந்தபைரவி
உயிர் நீ உந்தன் உடல் நான்
மனம் நீ உந்தன் மொழி நான்
உறவால் ஒன்று கலந்தோம்- இனி
பிரி வாலும் நினை வாவோம் (உயிர்)
கருணை மனுதந்தேன் எனைக்
கடலாய் நீ கலந்தாய்
அலையாய் அலைக்கழித்தாய் - அதில்
அமுதம் என உயிர்த்தேன் (உயிர்)
சொல்லால் நீ சொன்னாய் -அதன்
பொருளாய் வடி வெடுத்தேன்
சுவையாய் நீ பிறந்தாய் -அதன்
சுவையை நான் சுவைத்தேன் (உயிர்)
பிரிவின் ஓர் சுமையும்
நாம் பிரியா தினிசுமப் போம்
பிறப்பால் உறு பயனை - நாம்
ஒன்றாய் அனு பவிப்போம் (உயிர்)
கி.பாலாஜி
11.08.2019
காலை 10 மணி
மனதில் நிறைந்த தவம்
மனதில் நிறைந்த தவம்
*******
அலைந்து திரிந்துழைத்து
எமை ஆளாக்கி வைத்தவோர்
அன்புத் திருவுருவம் அப்பா
ஆன்ற செய்கைகளைத்
தம்செயலா லெமக்குணர்த்தும்
தன்னிகரே இல்லாத அப்பா
அதிகாலை கண் விழித்துப்
பார்க்கையிலே அருகினிலே
என்றும் இருந்ததில்லை அப்பா
நாங்களெல்லாம் நலமாக
இருந்திடவே நாளெல்லாம்
ஓயாமல் உழைத்திருந்த அப்பா
அப்பாவின் அகராதி
தனிலென்றும் ஓய்வென்ற
சொல்லொன்றே நாம்கண்ட தில்லை
அன்பென்ற சொல்லுக்கோ
அழகாய் பொருள் விளக்கம்
அதில் கண்டுநாம் மலைத்த துண்டு
தான் கொண்ட அன்பைச்
சொல்லால் விளக்கும் ஓர்
தகைமை அவரிடத்தில் இல்லை
தான் வேறு தன் சுற்றம்
தாம் வேறு என்றென்றும்
எண்ணிப் பார்த்ததுவும் இல்லை
தன் மனைவி தன் மக்கள்
தான் மட்டும் வாழ
என்றென்றும் எண்ணியதே இல்லை
ஊர் விட்டு ஊர் சென்று
உழைத்துப் பொருளீட்ட
உய்ந்தா ருடன்பிறந்தோ ரெல்லாம்
உற்றார் எல்லோரும்
ஓர்குடும்பம் தாமெனவே
ஒன்றாய் வாழ்ந்திருந்தார் அன்று
அத்தை சித்தப்பா
அனைவருமே அவர் மகனைத்
தன் மகவாய்த் தான்பார்த்தார் என்றும்
உறவின் வலிமை யெலாம்
தாம் செய்த செயலாலே
தெளிவாய் புரிய வைத்த அப்பா
பதிலா யெதனையுமே
எதிர்பார்த்தல் தவறென்றும்
தெளிவாய் புரியவைத்த அப்பா
தென்பொதிகைத் தென்றலெனச்
சிந்தையிலே நின்றுவிட்ட
தண்மையதன் திருவுருவம் அப்பா
நினைவுகளில் நீந்தி வரும்
தேமதுரத் தமிழிசையாய்
மனதில் நிறைந்த தவம் அப்பா !
---கி.பாலாஜி
28.08.2019
பகல் 10.30
Friday, September 27, 2019
தோடகாஷ்டகம்
Thursday, September 26, 2019
அகர முதல
அன்னை வாணி
Monday, April 22, 2019
கரையும் நினைவுகள்
உணர்வுகளாய் உள்ளில் கலந்து
நிறைந்த உருவம் !
நினைவுகளாய்
நீர்த்துப் பூத்து நெஞ்சகத்தே
கனன்று வந்த நெருப் பெனவே
காலம் முழுதும்
சுட்டு என்னைச் சாம்பலாக்கும்
சோகம் ஏனோ ?
தென்றலின் சுக மெனவே தேடி வந்து
என் தேவையெல்லாம் தீர்த்து வைத்த
தீஞ்சுடரே !
காற்றில் வந்து எனைக் கலந்த
கீதமே !
நீ புயற் காற்றாய் உருவெடுத்துச்
சுழன்ற தென்னே !
ஈருடலும் ஓருயிரும் என்றதுவும்,
என்னுள்ளே கலந்த உயிர் என்றதுவும்,
இன்னும்
எத்தனையோ வாக்குகளால்
இனிமையீந்து,
உயிர்க் காற்றாய் நிறைந்துவந்த
உருவே நீயும்
இன்று
உலர் காற்றாய் வீசியெங்கோ
மறைந்த தென்னே !
சொல்லொன்றும் செயலொன்றும்
ஆனவுந்தன்
அந்தரத்தின் அழகதனை
இன்று தானே
அறிய நேர்ந்தேன் !
அக்கணம் முதலே நானும்
தெளியலானேன் !
தேர்ந்த ஞானம் வரப்பெற்றுத்
துலங்கலானேன் !
நினைவுகளாய் மாத்திரம் நீ
நிறைய லானாய் !
நெஞ்சின் ஓர் மூலையிலே
மறையலானாய் !
கி. பாலாஜி
11.03.2018
அருளமுதம்
அருளமுதம்
கருணை வெள்ளம் நீ கண் திறக்கையில்
கருகும் பயிர்களும் தழைத்து ஓங்குமே
உலக வெப்பத்தால் உயிர்கள் வாடுதே
உலக நாதனே மழையை அருளுவாய்
அமுத நீரினைப் பொழியச் செய்குவாய்
அருளும் தெய்வமே அணைத்துக் காத்திடாய்
அன்பு ஒன்றினால் உலகை இணைத்திட
அருளும் குருவேயுன் பெருமை போற்றினோம்
வேண்டும் அளவு நீர் நிலைகள் நிறைந்திட
வேகமாகநீ ரமுதம் பொழிந்திட
அமுத கானமா யுன் னருளும் பரவிட
ஆதிசங்கரன் சீடன் அருளுவாய்.
(கருணை வெள்ளம் நீ கண்திறந்திடாய்)
--கி.பாலாஜி
22.04.2019
பகல் 12 மணி
மதுரைத் தலம் வாழும் மீனாக்ஷி
👆👆ராகம் : Hindholam
மதுரைத் தலம் வாழும் மீனாட்சி
மாதுளை நிறத்தாளே காமாட்சி. (மதுரை)
கருணைக்கடல் எம்மைக் கடாக்ஷி காசிமா நகர் வாழ் விசாலாட்சி
நாகையில் நலம் சேர்க்கும் நீலாயதாக்ஷி நம்பினோர்க் கருள் கூட்டும் நலமே யுன் ஆட்சி (மதுரை)
ஸுஜனி சுபம் நீ சௌதாமினி
ரஜனி ஜனனி ராஜேஸ்வரி
ஜகம்நீ ஜெயம்நீ ஜனரஞ்சனி ஜகன்மாதாவே ஸ்ரீரஞ்சனி. (மதுரை)
சுந்தரன் மன மாளும் ஸுகபாணி
சுந்தர ரூபிணி கல்யாணி
மங்களங்கள் நல்கும் மதுர வாணி மலையத்வஜன் மகளே மந்தாகினி (மதுரை)
-- கி.பாலாஜி
18.04.2019
பூவோடு பொட்டும் கண்டேன்
ராகம்: சாருகேசி
பூவோடு பொட்டும் கண்டேன்
---------
பூவோடு பொட்டும் கண்டேன்
புன்னகைக் கீற்று கண்டேன்
புள்ளி மான் ஒன்று நடை பயிலக் கண்டேன் கண்டே... களிப்பினில் மனம் மகிழ நின்றேன் (பூவோடு)
முல்லை மலர் மொட்டொன்று
முகைய விழ்ந்து கதை சொல்ல
முன் சொன்ன புதிர்களுக்கும்
முறையான விடை விளங்க
விளக்கத்தின் விலை கேட்டு
நின்றேன் - மனம்
நிலை மாறி நடம் புரியக் கண்டேன். (பூவோடு)
உல்லாசத் தேரொன்று
உள்ளத்தில் அசைந்தாட
உருவாகும் ஒரு நூறு
கவிதைக்கும் இசை சேர
இசை இன்பவெள்ளத்தி னிடையில்
இனிதாக மனமலரும் விடரும் ...
இனி தானே இன்பங்கள் தொடரும். (பூவோடு)
கி.பாலாஜி
07.03.1979
தோகை வளர் விழியே. .... தேஷ் ராகம்
தோகை வளர் விழியே
தூய தமிழ் மொழியே!
தூங்கா நகர் வாழும்
தும்பைப் பூ வழகே ! (தோகை)
மலயத்வஜன் மனையில்
மலர்ந்த மங்களமே
மாதேவன் திருமுன்பில்
மலர்ந்த மாதுளமே (தோகை)
சிகரம் வாழ்பெருமான்
தனைச் சேர்ந்த சீதளமே
சிந்தை மகிழ்விக்கும்
சிங்காரத் திருத்தலமே (தோகை)
மாதவனின் தங்காய்
மதுராபுரி நங்காய்
மனதால் நினைப்போர்க்கு
மங்களங்கள் அருள்கின்றாய் ! (தோகை)
சோகங்கள் இனியில்லை
சுந்தரன் ஸதியெல்லை
துதித்தேன் உனையென்றும்
உன் திருவருள் துணையுண்டு (தோகை)
கி.பாலாஜி
28.04.2018
12 am
மனமெனுமோர் மயனின் மாளிகை
மனம் எனும் ஓர் மயனின் மாளிகை அதில்
தினமு லாவும் தீயோர்
இன்பத் தாரகை
கணங்கள் தோறும் பிறக்கும்
தேவகானங்கள்
கனலும் நெஞ்சைக் குளிர வைக்கும்
கருணைப் பார்வை ரேகைகள்
காதல் என்னும் ராகம் தேடிக்
கழித்து வந்தேன் யுகங்கள் கோடி
கணத்தில் நெஞ்சில் புகுந்து கொண்டாய்
கழிந்த கணத்தை மீட்டுத் தந்தாய்
கலைந்த மேகம் கனவு எல்லாம்
களிப்பில் ஒன்றுகூடக் கண்டேன்
காலைப் பனியின் கதிரில் எந்தன்
கலிகள் ஓடி ஒளியக் கண்டேன்
வாடும் மனதை வாழவைக்கத்
தேடி வந்த தேவமலரே
சென்ற உயிரின் நின்ற துடிப்பை
மீட்டுத் தந்த மகர யாழே
பாட்டில் உன்னைப் பரவி வாழ்த்தப்
பதங்கள் தேடினேன்
பதங்கள் யாவும் போதவில்லை
பாதம் நாடினேன்
கி.பாலாஜி
05.06.1985
காலை 5 மணி
கலையாத சித்திரம்
நிறுத்தி எழுப்பி வைத்தால்
என்றைக்கும் கலையாமல்
சிரித்திருக்கும் சித்திரம் !
தனயனாய் தன் மகவாய்
என்னை வளர்த்திட்ட
ஏற்றமிகு சித்தப்பா !
அவர் காட்டிய அன்பால் என்
பிறந்தநாள் கொண்டாட்டம்
சிறந்ததென நான் அறிந்தேன்
பேணி வளர்த்த விதம்
பலவாறும் பலர்புகலக்
கேட்டு மகிழ்ந்திருந்தேன்
பாலகனாய் நான் இருக்க என்
நடத்தை களையெல்லாம்
சிறக்கச் செய்திடுவார்
பால் குடிக்கும் குழந்தை
நீயல்ல வெனச்சொல்லிப்
பலரோடும் பழகி வரப்
புறத்தே யனுப்பிடுவார் !
கூட்டிச் செல்கையிலே
நெற்றியில் திருநீற்றுக்
கீற்றிட்டுத் தாமதித்தேன்!
எது செய்ய வேண்டுமெனச்
சொல்லியொரு பாடம்
புகட்ட வொரு வார்த்தை மழை!
ஊற்றெனவே நிறைந்திருக்கும்
வெளியே பார்ப்பதற்கு
வேறொன்றும் தெரியாது!
பாலகன் நீயல்ல வெனச்
சொல்லிப் புறந்தள்ளிப்
பணிகளை ஏற்பிப்பார் !
அவர் ஏற்ற காரியமும்
என் கையில்தான் தந்து
என்னைமெரு கேற்றிடுவார் !
பழகவெனைப் பழக்குவித்த
பண்புதனை இன்றளவும்
நினைக்கின்றேன் உள்ளில் நான்!
சங்கீத ஞானத்தை
அழகாய் மெருகூட்டித்
தந்தென்னை உய்வித்தார்
கிருந்தவோர் நாட்டமெல்லாம்
கணக்கில் அடங்காது
கணக்கெடுக்க வியலாது
குறைவா யிருந்தாலும்
இத்தனை அறிவேது
இவருக்கென வியப்பேன்!
ஆங்கிலத்தில் இலக்கியம்
பொருளாதாரத் திலுமென்ன
புலமையென நான் வியப்பேன் !
எனக்கிருந்த ஐயமெல்லாம்
கணத்தில் தீர்த்து வைப்பார்
கண்டிப்பு நிறை ஆசான் !
எத்தனை புலமைகள்
அத்தனையும் ஓர் நாளில்
ஆவியாய் போனதென்ன?
எங்கும் நிறைத்து விட்டு
அனைவரிலும் வெறுமையதை
விதைத்து விட்டு விடை பெற்றார்
காலம் நகர்ந்தாலும்
நல்லதொரு நினைவுகள்
மாத்திரம் அகல்வதில்லை !
எம்மைக் காக்கின்றார்
நலமே சூழ்கென்று
வாழ்த்தி யருள்கின்றார் !
13.04.2019
அன்னாரின் நினைவுக்காக !
என்றும் நிலைக்கும் ராமநாமம்
ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம்
வில்லெடுத்த வீரமோ
சொல் தொடுத்த சாரமோ
கல் பிழைத்த கோலமோ
சொல்வதேது சொல்லிலே
மைநாக செருக் கழித்த
ராமதூதன் வீரமே
ராமன் வீரம்
தனையும் வெல்லும்
ராமநாம தீரமே
திருவரங்கத்தே நிலைக்க
செய்த லீலை எண்ணவோ
திண்மை அழித்து
நன்மை அணையக்
கொண்ட பிறவி என்னவோ
மானுடமே தழைக்க வேண்டி
மனிதனாக வந்து நின்று
பட்ட தொல்லை தம்மை வென்று
பாடம் சொன்ன ராம மே
எதை எடுக்க எதை விடுக்க
என்று குழம்பும் மனதிலே
என்றும் நிலைக்கும் ராமநாமம்
ஒன்று மட்டும் முடிவிலே
-கி.பாலாஜி
11.04.2019
காலை 9 மணி
பொழிக பொழிகவே
மழை வேண்டல்
பொழிக பொழிகவே - மேகம்
மலர்க மலர்கவே !
அமுத மழை பொழிகவே
அனைத் துயிர்களும் மகிழ்கவே
உயிரின் தாகம் அடங்கவே
உலகமெங்கும் தழைக்கவே (பொழிக)
உலக ளாவிய வெப்ப வேகம்
ஊற்று நீரால் தணிகவே
ஊற்று நீராய் உந்த னருளும்
உலகைக் காக்க எழுகவே (பொழிக)
நீர்நிலைகள் நிறைகவே
நிறைந்த காற்றும் குளிர்கவே
மண்ணின் மணத்தை நுகரும் கணத்தில் மங்களங்கள் பெருகவே (பொழிக)
நேரில் அருளும் வருண மனமும்
நிறைந்து குளிர்ந்து மகிழ்கவே
வீசும் கதிரின் வெப்பம் தணிந்து
விசிறியாகி வீசவே (பொழிக)
கி.பாலாஜி
09.04.2019
காத்திருப்பதில்லை என்றும் காலம்
காரணமும் தடையில்லை போலும் !
நடப்பவைகள் நேரத்தில் நடக்கும்
எந்த் தடைகளையும் தாண்டி அது நடக்கும் !
அருவமாக நின்ற காலம் தொட்டு - நான்
அறிந்த காலம் தொட்டு எந்தன் எண்ணம்
தன்னில் நிறைந்து நின்று ஆட்சி செய்த தாயே !
மனதுவைத்துக் காத்திடுவாள் தோதாய் !
மனம் சோர்ந்து விழுந்திருந்தேன் நோயால்
கணம்கணமும் கூட நின்று காத்தாய் !
என்றுதன் தளராத அன்பதனால் உணர்த்தி
வாய்மைதனை நெஞ்சகத்தில் புகட்டி
வளமான வாழ்வு தனை ஈந்தாய் !
வளர்த்த தாயர் அனைவருக்கும் மனதால்
பெற்ற தாயும் பேறளித்த தந்தையுமே
நும்மனைவருடன் கூட நின்று காப்பர் !!
08.04.2019
தாயாயிருந்த அன்னாரின் நினைவுக்காக !
அம்பலவாணனே
அம்பல வாணனே அருள்தரும் நாதனே
அன்புடன் காருமையே
ஆதரவுன் னினை வொன்றேதானே
அது நிலைத் திடட்டுமையே (அம்பல வாணனே)
அழலின் உருவமே அருளின் உருவமா
யமைந்திடு பரம்பொருளே
ஆலம் உண்டுயிர் காத்திட முன்னின்ற
அறக்கரு ணாநிதியே (அம்பல வாணனே)
பன்னிரு திருமுறை போற்றும் பதியே
பங்கயக் கண்ணாள் பதியே
பாமரன் எனக்குன் தாமரைக்கண் திறந்
தருள்செய் திடுநிதி யே !
பதஞ்சலி பதத்திற் கிடப்பதம் தூக்கித்
திருநடனம் புரிந்தனை யே
பாவாலுனைத் துதித் தேத்திட வருள்செய்
பார்வதி நாயகனே ! (அம்பல வாணனே)
கி.பாலாஜி
08.04.2019
பகல் 11.30
நினைவு மலர்கள்
நினைவு மலர்கள்
அன்றைய நினைவுகள்
அனைத்துமே மனதினில்
அழுத்தமாகவே
அமர்ந்து விட்டன !
ஆலாபனங்களைத்
தொடங்கி விட்டன !
நினைவுகளுக்கு
குணமும் உண்டு,
மனதை மலர்த்தும்
மணமும் உண்டு !
சென்றதை எல்லாம்
சேர்த்து வைத்து,
'நடந்தவை எல்லாம்
நன்மை' என்னும்
போர்வையதனைப்
போர்த்தி எடுத்து,
புன்னகையுடனே
நமக்கு அளிக்கும்
அனுபவ ஞானம்
அதற்கு உண்டு !
கண்ணுக்கெட்டிய
தூரம் வரையில்
விரிந்து கிடக்கும்
பசுமை வெளியும்,
பூமியின் முகத்தில்
புன்னகை நிறைக்கப்
புதுமை மஞ்சள்
பூசிய முகங்களும்,
அன்றைய மழையில்
மனதை நனைத்த
மல்லிகை மணமும்
மாவின் பூக்களும்,
துவண்டு வீழும்
கணங்களில் எல்லாம்
தோரணமாக என்
தோளில் படர்ந்த நின்
அன்புக் கரங்களும்
அற்புதச் சிரிப்பும்,
வாழ்வில், இன்னும்
வேண்டும் என்னும்
வேண்டுதல் இன்றி
வாழ்ந்த நாட்களும்,
இன்னும் என்னுள்
வந்து துளிர்க்கும்
வசந்த காலத்
துணர்வை வளர்க்கும்!
நினைவுகள் ஒன்றே
என்னுள் என்றும்
கலந்து கரையும்
இன்னிசை யுருவம்!
உணர்வில் கலந்து
உறைந்து நின்று
உயிரை வளர்க்கும்
சங்கீதம் !
--கி.பாலாஜி
07.04.2019
இன்னிசையின் அதிர்வலைகள்
சங்கீத அதிர்வலைகள்
நினைவுகளைத் தொலைத்துவிட்டு
நிற்கிறேன் நான் இன்று
ஏதோவோர் இழை மட்டும்
இன்னும் தெரிகிறது !
அறுந்ததோர் பட்டம் போலே
அலைந்தே திரிகின்றேன்
நுனியைப் பிடித்தவாறே
நூலிழையாய் நகர்கின்றேன்
ஒளிவீசும் கதிர்களிலே
ஒரு கதிர் மாத்திரம் என்
கண்முன்னே வாராதோ
கவலைகள் தீராதோ
காற்றின் திசை போன
போக்கில் நான் பயணிக்க
கணநேர மின்னலென
கதிர்வீச்சின் வெள்ளமென
புன்னகைப் பூ பூக்கிறது
புவியே மலர்கிறது
பூந்தோட்டம் சிரிக்கிறது
புதுமழலை பிறக்கிறது
பொன்னாரம் ஒன்றெந்தன்
நெஞ்சார நிலைக்கிறது
போற்றிப் பரவசத்தில்
மகிழ்ந்து மனம் லயிக்கிறது
கண்ணார நான் காணும்
காட்சிகளில் ஒளிவட்டம்
மனதார நான் எழுதும்
வரிகளிலே மணிநாதம்
சலனமற்ற தடாகத்தில்
சலசலப்பின் மகிழ்வலைகள்
சந்நிதியின் திரைவிலக
சங்கீத அதிர்வலைகள் !
--கி. பாலாஜி
07.04.2019
நேரமிது நேரமிது...
நேரமிது நேரமிது
நித்திலமே நீ உறங்கு
நிம்மதியை வரமாகப்
பெற்றவனே நீ உறங்கு
நெஞ்சினிலே வஞ்சமில்லை
நிம்மதியாய் நீ உறங்கு
அஞ்சுவதற்கொன்றுமில்லை
அன்புருவே நீ உறங்கு
பாமகனே நீ உறங்கு
பூ முகமே நீ உறங்கு
பார்வையிலே மனங்களை நீ
ஆளுகின்றாய் கண்ணுறங்கு
பால் மணக்கும் தேன் மொழியே
புன்னகையே நீ உறங்கு !
பூவினமே நீ உறங்கு
பொன்னாரமே உறங்கு !
--கி பாலாஜி
மார்ச் 26 2019
12 15 am
(ராம்குமார் சரசுராமுக்காக எழுதப்பட்டது)
மெல்ல மெல்ல மனம் புகுந்தாய்
ராகம் : தேஷ்
மெல்ல மெல்ல மனம் புகுந்தாய்
நொந்த மனம் நீ சுமந்தாய்
வந்தவழி வசந்தங்களை
சொந்தம் எனக் கொண்டு தந்தாய் (மெல்ல)
பந்தம் என்றும் பாசம் என்றும்
பலர் புகலக் கேட்டு விட்டேன்
பார்த்தறியாப் பாசங்களை
பாவை நீ புகட்ட வந்தாய். (மெல்ல)
பகலெல்லாம் பாரங்களை
சுமந்தே சலித்த மனம்
பால் நிலவு நேசமுகம்
பார்த்தவுடன் பரவசமாம்
தெய்வங்களைக் கேட்டதில்லை
தேவை ஒரு வரம் என்று
கேளா வரமதனை
தானாகத் தந்து விட்டான். (மெல்ல)
கி.பாலாஜி
16.06.1984
(மனைவிக்காக எழுதப்பட்டது)
மணமாக நீ நிறைவாய்
எங்கெங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும் நிர்மலமே
நின்னருளைத் தேடிநின் றேன்
இன்னமுத மீந்திடு வாய்
நீண்டுவரும் காரிருளில்
திரண்டுவரும் கார்மேகம்
கண்டுமனம் கலங்கிட நீ
மின்னல்கீற் றெனவரு வாய்
மதுவுண்டு மயங்கிடு மோர்
மலர்வண்டின் ரீங்காரம்
மனமெங்கும் இசைப்பதுபோல்
மணமாக நீ நிறைவாய்
கி.பாலாஜி
15.03.2019
பாதைகள்
பாதைகள்
நீளலாம், குறுகலாம்,
தொடங்கலாம், தொடரலாம்!
வளையலாம் வடம்போலே
இறுகலாம்
வெயிலிலே உருகலாம்
வளைவினோர் சிணுங்கலில்
சிந்தனையைத் திருப்பலாம்
சீரான தாளகதி
தன்னையும் வழங்கலாம்
சிக்கலை இறுக்கியின்னும்
சீர்படுத்த
முனையலாம் !
பாதையிலே செல்லுகின்ற
பயணங்கள் கூடிவரப்
பார்த்துவரும் அனுபவங்கள்
பழமைகளை மாற்றலாம் !
சோர்ந்துவிழும் மனங்களதன்
சோகநிலை மாறலாம் !
பயணம் செய்கின்ற
பாதங்கள் மாறலாம்!
பாதைகள் மட்டும்தன்
பழையநிலை மாறாமல்
பயணிகளின் வரவுகளால்
வேறுநிலை கொள்ளாமல்
என்றும் ஒருதலையாய்
எவருக்கும் ஒருவழியாய்....
கி. பாலாஜி
13.01.2019
இறைவா உனக்கு நன்றி !
இந்தக் கணத்தை எனக்கு அளித்த
இறைவா உனக்கு நன்றி!
இன்று புதிதாய் பிறந்த உணர்வை
ஈந்த உனக்கு நன்றி!
இதுவரை மலர்ந்த மலர்கள் பரப்பிய
மணத்தில் மனமும் குளிர்ந்தேன்!
இதோ விரிந்த காலைக் கதிரின்
இளகிய சூட்டில் மகிழ்ந்தேன்!
இனிய மதலைச் சிரிப்பின் முன்னே
இதயம் கொட்டிக் கவிழ்த்தேன்!
கரையும் காகம் குயிலின் குரலில்
உலகை நானும் மறந்தேன் !
ஒலியின் ஒவ்வோ ரலையிலும் இசையின்
அதிர்வைக் கேட்டு ரசித்தேன்!
மலரின் சிரிப்பில் மதலையின் மொழியில்
மயங்கும் மனமிது சுகமே!
இனியெவர் பொருட்டும் இதயம் ஏங்கும்
கணங்கள் எனக்கு இல்லை!
இருக்கும் வரையில் அன்பை மட்டும்
ஈந்து வந்தால் போதும் !
இதயம் கனிந்து எதிலும் கலந்து
கரைந்து நின்றால் போதும்!
இதுவரை நடந்த செயல்க ளெல்லாம்
உனதென் றுணர்ந்தால் போதும்!
பலனும் வேண்டாம் பரிசும் வேண்டாம்
பாசம் ஒன்றே போதும்!
அதுவும் உன்மேல் வைத்துப் பிறப்பின்
உண்மை உணர்ந்தால் போதும்!
-- கி.பாலாஜி
01.01.2019
இரவு 9.10
இன்னும் ஒரு நாள்...
இன்னும் ஒரு நாள்
கடந்து போனது
இதயம் உள்ளில்
கரைந்து போனது
எத்தனை கனவுகள்
எத்தனை நினைவுகள்
என்னை இதுவரை
கடந்து போயின
கண்டவை இனியவை
காணாது போயவை
இன்னும் இனியவை
இதயம் நிறைத்தவை
சொல்ல மறந்த
சொற்கள் ஆயிரம்
சொல்லாமலே மறைத்த
சோகம் பல்லாயிரம்
எண்ணம் இறைத்த
வண்ணமோ ராயிரம்
எண்ணா திருத்த
வண்ணமீ ராயிரம்
சொல்லிய வண்ணம்
செய்ததோ ராயிரம்
சொல்லவே யொண்ணாச்
செயல்களோ ராயிரம்
பண்ணி வைத்த
பாயிரம் ஆயிரம்
பண்ணா திறைந்த
எண்ணமோ ராயிரம் !
பண்ணாய் என்னுள்
கலந்தவ ராயிரம்
கலந்தவர் சிலரே
நிலைத்த தோர்திறம் !
இன்னும் நாட்கள்
கடந்து போகலாம்
இதயம் பலரில்
கரைந்தும் போகலாம்
எத்தனை பேரின்
இதயம் கலந்தேன்
என்பது ஒன்றே
என்னில் நானாய்
வாழ்ந்தி ருந்ததின்
பலனைத் தந்திடும்
எடுத்துக்காட்டாய்
என்றும் நிலைத்திடும் !
--கி. பாலாஜி
01.01.2019